பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘பாகுபலி ’ திரைப்படங்கள் உலகளவில் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியை குவித்தது. 1000 ஜோடி ரூபாய்க்கு மேல் இந்தப் படம் வசூலை அள்ளிக் குவித்தது.
உலக அரங்கில் தென்னிந்திய சினிமாவிற்கு அடையாளம் தேடித் தந்த ‘பாகுபலி’ திரைப்படங்களுக்கு மக்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ், தமன்னா உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதை கவர்ந்தனர். சமீபத்தில் பாகுபலி 2 படத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவை படக்குழுவினர் கொண்டாடி மகிழ்ச்ந்தனர்.
இந்நிலையில் இந்தப்படம் மீண்டும் ஒரு சாதனையை படைத்துள்ளது. பாகுபலி 2 படம் ரஷ்ய மொழியில் டப் செய்யப்பட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியுள்ளது. இந்தியாவின் ரஷ்ய தூதரகத்தின் அதிகாரபூர்வமான ட்விட்டர் கணக்கில் படக்காட்சிகளை எடிட் செய்து வீடியோவை பதிவேற்றியுள்ளனர். அதில், ‘இந்திய சினிமா ரஷ்யாவில் பிரபலமடைகிறது. ரஷ்ய தொலைக்காட்சியில் இப்போது என்ன ஒளிபரப்பப்படுகிறது என்று பாருங்கள்: ரஷ்ய மொழியில் டப் செய்யப்பட்ட பாகுபலி திரைப்படம்!’ என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு முன்பாகுபலிதான் லண்டனில் முதல் முறையாக ஒளிபரப்பப்பட்ட இந்தியப் படம் என்ற சாதனையை படைத்திருக்கிறது. லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஆல்பர்ட் தியேட்டரில் பாகுபலி படம் திரையிடப்பட்டது. அப்போது ஆங்கில் சப்டைட்டிலுடன் படம் ஒளிபரப்பப்பட்டடது.
லண்டன் ஆல்பர்ட் தியேட்டர் தொடங்கப்பட்ட 148 ஆண்டுகளில் இதுவரை ஆங்கிலம் தவிர எந்த வேற்று மொழிப்படமும் ஒளிபரப்பப்பட்டது இல்லை. ஆனால் முதல் முறையாக இந்திய மொழி திரைப்படமாக பாகுபலி தி பிகினிங் திரைப்படம் ஒளிபரப்பானது. அந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் பாகுபலி படக்குழுவினரும் பங்கேற்றனர். படத்தின் இயக்குநர் எஸ் எஸ் ராஜமவுலி, தயாரிப்பாளர் ஷோபு, பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ஆகியோர் வரலாற்று நிகழ்வில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
இப்போது ரஷ்ய மக்களும் பாகுபலியின் தீவிர ரசிகர்களாகியிருப்பார்கள் என்றால் மிகையில்லை.