தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, அடுத்தடுத்து விறுவிறுப்பு நிறைந்த டாஸ்க்குகள் மற்றும் நிகழ்வுகளால் சென்று கொண்டிருக்கிறது.

எப்போது எந்த சம்பவம் நடைபெறும் என்பதை சில நேரம் யூகிக்க முடியாத அளவுக்கு சண்டைகள் அல்லது பரபரப்பு சம்பவங்கள் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறும்.
இதனால் ரசிகர்கள் கூட இந்த நிகழ்ச்சியை மிகவும் ஆவலுடன் கண்டு களித்து வருகின்றனர். முன்னதாக, முதல் இரண்டு வாரம் பிக்பாஸ் வீட்டில் சிறந்த போட்டியாளர்களில் ஒருவராக வலம் வந்த ஜிபி முத்து, தனது மகன் மற்றும் குடும்பத்தினரை பிரிந்து இருக்க முடியாது என கூறி சுய விருப்பத்துடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து, சாந்தியும் எலிமினேட் செய்யப்பட கடைசி வாரத்தில் அசல் கோலாரும் எலிமினேட் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். இதற்கு அடுத்தபடியாக அடுத்தடுத்து டாஸ்க்குகள் உள்ளிட்டவற்றால் பல்வேறு திருப்புமுனைகள் பிக்பாஸ் வீட்டில் நடந்து கொண்டே தான் இருக்கிறது.
இந்த நிலையில், அசீம் மற்றும் மகேஸ்வரி ஆகியோரிடையே சண்டை நடந்தது தொடர்பான விஷயம் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் வீட்டில் தற்போது டிவி டாஸ்க் நடைபெற்று வருகிறது. அப்போது விக்ரமன் பேசியது கேட்கவில்லை என ஜட்ஜாக இருக்கும் மகேஸ்வரி முறையிடுகிறார். இது தொடர்பாக விக்ரமன் மற்றும் அமுதவாணன் ஆகியோர் தொடர்ந்து விளக்கம் கொடுத்து கொண்டே இருந்தாலும் டாஸ்கின்போது அப்படி எதுவும் அவர்கள் தெளிவாக சொன்னதாக தனக்கு கேட்கவில்லை என்பதில் மகேஸ்வரி உறுதியாக இருக்கிறார். அதே வேளையில், அசீம் உள்ளிட்ட போட்டியாளர்கள் தங்களுக்கு விளங்கியதையும் குறிப்பிடுகின்றனர்.
தொடர்ந்து பேச்சு வளர்ந்து கொண்டே போக, அசீம் குறித்து பேச அமுதவாணன் முற்படுகிறார். அப்போது பதில் பேசும் மகேஸ்வரி, "அசீம் இல்லங்க, நான் தான் ஜட்ஜ். யாருங்க அசீம் முடிவு பண்றதுக்கு?" என கேட்கிறார். இதனை கேட்டதும் அசீம் யாருன்னு எதுக்கு கேக்குறீங்க என அசீம் கூற, "நீங்கள் உங்கள் Opinion தான் கொடுக்க முடியும். முடிவு பண்ண முடியாது. அசீம வெச்சு பேசாதீங்க" என்றும் மகேஸ்வரி தெரிவிக்கிறார்.
இதன் பிறகு, அசீம் மற்றும் விக்ரமன் ஆகியோர் முறையிட இந்த விவகாரம் சக போட்டியாளர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பி இருந்தது. இதனைத் தொடர்ந்து, சக போட்டியாளர்களிடம் பேசும் மகேஸ்வரி, "அசீம் வந்து Present பண்ணி இருந்தா இப்படி பேசுவாரா?. அது எப்படி நீங்க சொல்லலாம்ன்னு வக்காலத்துக்கு வந்து இருப்பாரா இல்லையா?" என்றும் கேட்கிறார்.
மறுபக்கம், "நீங்க நியூஸ் வாசிச்சு இருந்தா அப்படி செய்திருக்க மாட்டீர்கள்" என மகேஸ்வரி கூறி விட்டு போனதை பற்றி விக்ரமன் அசீமிடம் கூற, அங்கிருந்து நேராக மகேஸ்வரியிடம் சென்று நியாயம் கேட்கிறார்.
இதனிடையே இந்த வார இறுதி நெருங்கிக் கொண்டிருக்கிறது. சண்டைகள் என்று எடுத்துக் கொண்டால் அசீம் - தனலட்சுமி சண்டை, விக்ரமன் - மணிகண்டன் சண்டை, விக்ரமன் - மகேஸ்வரி சண்டை மற்றும் ராபர்ட் ரச்சிதா இடையே நடந்த க்யூட் சண்டை ஆகியவை இந்த வார ஹைலைட்ஸாக இதுவரை திகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.