விஷ்ணு விஷால் நடிப்பில் ‘இன்று நேற்று நாளை’ திரைப்படத்தை எழுதி இயக்கியவர் இயக்குநர் ரவிகுமார்.
இந்த படத்தின் நேர்த்தியான திரைக்கதைக்காக அதிக வரவேற்பையும் பாராட்டையும் பெற்றார் இயக்குநர் ரவிகுமார். இதனைத் தொடர்ந்து, ரவிகுமார் இயக்கத்திலான Hi-Concept படங்கள் மீது எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தது அவருடைய ‘அயலான்’ பட செய்தி. ஆம், அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிகுமார் அயலான் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இதனிடையே தமது உதவி இயக்குநரின் ஒரு ஆரோக்கியமான கொள்கைக்காக, ஷூட்டிங் லொகேஷனையே மாற்றியதாக இயக்குநர் ரவிகுமார் குறிப்பிட்டு நெகிழ வைத்துள்ளார்.
இது தொடர்பான ஃபேஸ்புக் பதிவில், “எனது இயக்குனர் குழுவின் மிக முக்கியமானவன் நாகேந்திரன். கிட்டத்தட்ட நான்காண்டுகளுக்கு மேலாக என்னுடன் பயணித்து வருகிறான், அயலான் திரைப்படத்தில் அவனது பணி அளப்பரியது. ரொம்பவும் புதுமையை விரும்புபவன். மனிதாபிமானத்திலும் அதை தாண்டி இயற்கையின் மீதும் பற்றுள்ளவன். படப்பிடிப்பு தளத்தில் ஒரு மரத்தையும் செடியை வெட்டிவிடக்கூடாது என்று கவனமாக இருப்பான்.
இவனுக்காகவே நான் லொக்கேசனை மாத்தியிருக்கிறேன். இன்னும் ஒரு படி மேலே போய் நச்சுபுகையால் சுற்றுப்புறத்தை மாசுபடுத்தும் என்று வாகனத்தையும் தவிர்த்துவருகிறான். கூடிய சீக்கிரமே மிகச்சிறந்த இயக்குனராக வெளிப்படுவான் அதற்கு முன்னோட்டமாக தனது முதல் குறும்படத்தை இயக்கியிருக்கிறான். நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். வாழ்த்துக்கள்டா!” என இயக்குநர் ரவிகுமார் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள ‘அயலான்’ திரைப்படத்தின் ‘வேற லெவல் சகோ’ சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் படத்தின் நிறைவுப்பணிகளும் ரிலீஸ் பணிகளும் தயாராகி வருகின்றன. கொரோனா காலம் என்பதால் இந்த படத்தின் வரவு தாமதமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: "ஷங்கர் - ராம்சரண்" படத்தில் இணைந்த முக்கிய 'RRR' பிரபலம்! அப்போ ‘வெயிட்டு’ தான்!