இன்று தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக கலக்கி வரும் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள். ரசிகர்கள் தொடங்கி பெரும் நட்சத்திரங்கள் வரை அவரை வாழ்த்தி கொண்டிருக்கின்றனர். இவ்வளவு பெரிய அங்கீகாரத்தை அவர் சீக்கிரத்திலேயே பெற்றுவிட்டார். ஆனால் அதற்கு முன்பு, இதை அடைய சிவகார்த்திகேயன் கடந்த வந்த பாதை கண்டிப்பாக நாம் எல்லோரும் நினைவு கூர்ந்து பார்க்க வேண்டியது.
திறமை. திறமை. திறமை. இதுமட்டுமே சிவகார்த்திகேயன் வைத்திருந்த மூலதனம். அந்த திறமையுடன் சேர்த்து கொஞ்சம் தைரியம். இதை மட்டுமே கொண்டு தனது மிமிக்ரியால் தன் பக்கம் கவனத்தை ஈர்த்தார். கல்லூரியில் சில நிகழ்ச்சியில் மிமிக்ரி செய்தவருக்கு, விஜய் டிவியின் கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்க, தனது கவுன்டர்களாலும் மிமிக்ரியாலும் சிரிப்பு வெடிகள் போட்டு சிக்சர் அடித்தார். தமிழகமெங்கும் சிவாவின் முகம் தெரிய ஆரம்பித்தது. இதை தொடர்ந்து பாய்ஸ் விசஸ் கேர்ள்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று நடனத்திலும் அசத்தினார். பிறகு ஜோடி நிகழ்ச்சியில் தொகுப்பாளர் அவதாரம். அந்த நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணன் உடன் சிவா செய்த சேட்டைகள் எல்லாம் சின்னத்திரை ஃபேவரைட் மொமன்ட்ஸ் ஆனது. இதை தொடர்ந்து சிவகார்த்திகேயின் டிவி வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை கொடுத்த நிகழ்ச்சி அது இது எது. மூன்று விருந்தினர்களை வைத்து கொண்டு, தனது நகைச்சுவையுடன் சிவா தொகுத்து வழங்கிய அந்நிகழ்ச்சி மிகப்பெரிய ஹிட் அடித்தது. அன்றிலிருந்து சின்னத்திரையின் சூப்பர்ஸ்டார் ஆனார் சிவகார்த்திகேயன்.
டிவியில் அடிக்கடி பார்த்திவிட்ட முகத்தை சினிமாவில் மக்கள் பார்க்க விரும்ப மாட்டார்கள், நீங்க எல்லாம் ஹீரோ மெட்டிரியல் கிடையாது என எத்தனையோ விமர்சனம் வந்திருக்கும். ஆனால் அதையெல்லாம் கடந்து மெரினா படத்தில் அறிமுகம். முதல் படத்திலேயே தன்னை கவனிக்க வைத்தார் சிவா. இதையடுத்து வந்த மனம் கொத்தி பறவையும் சிவாகார்த்திகேயனை கிராமங்களில் ஓரளவுக்கு கொண்டு சேர்த்தது. அதற்கு இமானின் பாடல்கள் பெரிதாக உதவின. இதை தொடர்ந்து வந்த எதிர்நீச்சலும் மக்களை வெகுவாக கவர, சிவா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இளம் கதாநாயகர்களில் ஒருவரானார். ஒரு கதாநாயகனாக அறிமுகமாகியாச்சு, அடுத்த என்ன என எதிர்ப்பார்த்திருந்த சிவாவுக்கு வகையாக வந்து சிக்கியது வருத்தப்படாத வாலிபர் சங்கம். சூரியுடன் இவர் சேர்ந்து அடித்த அலப்பறையில் ஏ, பி, சி என ஆல் சென்டரும் சிதறியது. படம் தாறுமாறு ஹிட். இந்த ஜெனரேஷன் கிராமத்து காமெடி படங்கள் என ஒரு ட்ரென்டை செட் செய்தது சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம். அடுத்து அப்படியே ஆப்போசிட்டாக மாறி மான் கராத்தே படத்தில் கலர்ஃபுல் சில் ப்ரோவாக வலம் வந்தார் சிவா. அனிருத்தின் பாடல்களும் பின்னணி இசையும் சிவகார்த்திகேயனுக்கு மாஸ் இமேஜை ஏற்படுத்தி கொடுக்க, ஹன்சிகாவுடன் ஜோடி போட்டு அசத்தினார்.
காக்கி சட்டையில் போலீஸ் வேடம் போட்டு கெத்து காட்டிய சிவா அடுத்து தனது ஹோம்க்ரவுன்டில் இறங்கி ரஜினிமுருகன் என செஞ்சுரி அடித்தார். பொங்கலுக்கு வந்து ரஜினிமுருகன் திரைப்படத்தை குடும்பம் குடும்பமாக கொண்டாடி ரசித்தார்கள். உன் மேல ஒரு கண்ணு என தமிழ்சினமா ரசிகர்களின் கண்களை தன் மீது நிரந்திரமாக் தங்கவைத்தார். ரசிகர்கள் மன்றங்கள் அமைத்து சிவாவை கொண்டாடினார்கள். ரெமோவில் ஒருபக்கம் யூத்தாக கலக்கியதோடு இன்னொரு பக்கம் பெண் வேடமிட்டு வெரைட்டி காட்டினார் சிவா. இதையடுத்து மோகன் ராஜாவுடன் வேலைக்காரன். மிகப்பெரிய வியாபார அரசியலை மையமாக கொண்டு உருவான அப்படத்தில் சிவா மக்களுக்கு தேவையானதை பேசினார். அப்போதே அவர் அடுத்தக்கட்ட ஹீரோவாக உயர்ந்துவிட்டார். இதை தொடர்ந்து வந்த சீமராஜா, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்கள் பெரிய வெற்றி பெறாமல் போகவே, அது குறித்து வெளிப்படையாக மேடைகளில் சிவகார்த்திகேயன் பேசினார். சிவகார்த்திகேயன் வீழ்ந்துவிட்டார், அவர் அவ்வளவு தான் என கொக்கரித்தது ஒரு கூட்டம். ஒரு சாதாரண ஆள் எப்படி இவ்வளவு பெரியதாக வளரலாம் என அவர்கள் நினைத்திருக்கையில், நம்மள மாதிரி பசங்க ஒருவாட்டி ஜெயிச்ச பத்தாது, ஒவ்வொரு வாட்டியும் ஜெயிக்கனும் என நம்மவீட்டு பிள்ளையில் மீண்டும் தனது ஃபார்முக்கு வந்தார் சிவகார்த்திகேயன். எங்க அண்ணன் பாடலை பாடாத தங்கச்சியும் இல்லை, கும்முரு டுப்பரு பாடாத பொடிசுகளும் இல்லை எனும் அளவுக்கு சிவகார்த்திகேயன் எல்லோரது வீட்டிலும் ஒருவராக மாறினார். இதற்கிடையில் ஆரம்பம் முதல் தன்னோடு இருந்த நண்பன் அருண்ராஜா காமராஜின் இயக்குநர் கனவை நினைவாக்கும் வகையில் சிவாகார்த்தியேன் தயாரித்த படம் கனா. படமும் ஹிட், சிவகார்த்திகேயனின் கேமியோவும் லைக்ஸ் அள்ளியது. அடுத்து ஹீரோவில் பலரது கனவை நினைவாக்கும் கோபம் கொண்ட ஹீரோவாக ஜொலித்தார் சிவகார்த்திகேயன்.
இதோ அடுத்து ரவிகுமார் இயக்கத்தில் அயலான். முதல்முறையாக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சிவகார்த்திகேயனுக்கு இசையமைக்கிறார். தமிழ் சினிமாவுக்கு பெரிய அறிமுகமில்லாத ஸ்பேஸ் சையின்ஸ் ஃபிக்ஷன் படம். அதை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் டாக்டர். இப்படி தன் க்ராஃபை சிவா பக்காவாக செட் செய்து பயணித்து கொண்டிருக்கிறார். இவ்வளவு பெரிய உயரத்தை இவர் எப்படி சீக்கிரமே அடைந்துவிட்டார் என நாம் நினைக்கலாம். ஆனால் சிவா அப்படி எல்லாம் அதை அசால்ட்டாக அடைந்துவிடவில்லை. சினிமாவுக்கு பெரிய அறிமுகமில்லாத குடும்பம், காலேஜ் படிக்கும் போது தந்தையை இழந்த சாதாரண மிடில் க்ளாஸ் வாழ்க்கை, எல்லாம் தாண்டி வெறும் திறமையை மட்டுமே நம்பி அவர் இங்கு கால் பதித்தார். டிவி நிகழ்ச்சிகளில் பல மணி நேரம் நின்று கொண்டே அவர் வேலை செய்ய வேண்டி இருந்தது. அப்படி அவர் போட்ட உழைப்பு தான், இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக அவரை அமர வைத்திருக்கிறது. நடித்தது வெறும் பதிமூன்று படங்கள் தான், ஆனால் பிசினஸ் கோடிகளில். அதுதான் சிவகார்த்திகேயன் எனும் சாமானியன் படைத்த சரித்தரம். இது ஒருபுறம் இருக்க, உனக்கு திறமை இருக்கிறதா, உன்னாலயும் என்னை மாதிரி மேலே வர முடியும் என மிடில் க்ளாஸ் இளைஞர்களின் நம்பிக்கை முகமாக சிவகார்த்திகேயன் இருப்பதால் தான் அவர் நம்மவீட்டு பிள்ளையாக கொண்டாடப்படுகிறார்.
Common Man-ஆக வந்து, இன்று ஆயிரக்கணக்கானோர் Common DP வைக்கும் அளவில் உயர்ந்திருக்கும், ப்ரின்ஸ் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!