பிரபல மேற்கு வங்க இயக்குநர் புத்ததேவ் தாஸ்குப்தா (Buddhadeb Dasgupta) காலமானார்.
1978-ஆம் ஆண்டு புத்ததேவ் தாஸ்குப்தா பெங்காலியில் இயக்கிய அவரது முதல் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் இந்தியிலும் 2 திரைப்படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக பிரபல சீரியஸ் இயக்குநர்கள் சத்யஜித் ரே, ரித்விக் கட்டாக், மிருணாள் சென் உள்ளிட்டோரின் திரைப்பட வரிசையில் புத்ததேவ் தாஸ்குப்தா இயகிய பாக் பகதூர், தஹதேர் கதா, கராச்சார், உத்தாரா, கால்புருஷ் உள்ளிட்ட ஏராளமான படங்கள் முக்கியத்துவம் பெற்றன.
இப்படி தான் இயக்கிய படங்களுக்காக இவர், 5 முறைய சிறந்த படத்துக்கான தேசிய விருதுகளையும் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதுகளை 2 முறையும் பெற்று புகழ் பெற்றவர். இவர் இயக்கிய பல்வேறு படங்கள் திரைப்படங்களில் ஆர்வம் இருப்பவர்களால் தொடர்ந்து அதிகம் கவனிக்கப்பட்டன. உள்நாட்டு தேசிய விருதுகள் மட்டுமன்றி பல்வேறு வெளிநாட்டு பட விழாக்களின் விருதுகளையும் இவர் வென்று பெருமை சேர்த்துள்ளார்.
இயக்குநராக மட்டுமல்லாமல், ஒரு கவிஞராகவும் இவர் வெளியிட்டுள்ள கவிதைத் தொகுப்புகள் பிரபலம். இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த புத்ததேவ் தாஸ்குப்தா, மனைவியுடன் கொல்கத்தாவின் தெற்கு பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்த நிலையில், தூக்கத்திலேயே காலமானதாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தமது 77வது வயதில் புத்ததேவ் தாஸ்குப்தாவின் இறப்பை அடுத்து இந்திய பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.