சிம்பு நடிப்பில், ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ள திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு’.
'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு கதாநாயகனாக 'முத்து' எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார். சிம்புக்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் கௌதம் மேனனுடன் நான் கடவுள், அங்காடி தெரு, 2.O, பாபநாசம், சர்கார், இந்தியன்-2, பொன்னியன் செல்வன், விடுதலை உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதிய எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படத்திற்காக முதல் முறையாக இணைந்துள்ளார்.
கவிஞர் தாமரை இப்படத்துக்கு பாடலாசிரியராக பணிபுரிந்துள்ளார். கலை இயக்குனராக ராஜிவ் நாயரும், உடை வடிவமைப்பாளராக கௌதம் மேனனின் தங்கை உத்தாரா மேனனும் பணிபுரிந்துள்ளனர். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சி அதிகாலை 5 மணிக்கு திரையிடப்படும் என திரையரங்குகள் அறிவித்துள்ளன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் அதிகாலை முதல் நாள் முதல் காட்சி சுமார் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்படுகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அடிப்படையில் புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்துக்கு ஆதரவு வேண்டி ரசிகர்களிடமும், ஊடகங்களிடமும் பேசிய நடிகர் விஜய டி.ராஜேந்தர், “இந்த படத்துக்கு ஒரு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. காரணம் இந்த படத்தின் காம்பினேஷன், அப்படி ஒரு காம்பினேஷன் அமைய வேண்டும். அது முரட்டு காளை என்றாலும் சரி, எஜமான் என்றாலும் சரி, ரஜினி என்றால் ராசி ஏவிஎம் (புரொடக்ஷன்ஸ்), இதேபோல் சிம்பு என்றால் ராசி ஜிவிஎம் (கவுதம் வாசுதேவ் மேனன்). கௌதம் மேனனின் இயக்கத்தில் விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களை தொடர்ந்து இப்போது வெந்து தணிந்தது காடு மிகப்பெரும் எதிர்பார்ப்பை கொடுத்துள்ளது. இது ஒருவெற்றிகி கூட்டணி.” என்று பேசினார்.