கடந்த 2009 ஆம் ஆண்டு ‘டைட்டானிக்’ பட புகழ் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றப் படம் அவதார்.
அவதார் படம்தான் உலகில் அதிக வசூல் செய்த படம் (2.4 பில்லியன் அமெரிக்க டாலர்) என்ற சாதனையைப் படைத்திருந்தது. அதற்கு முன்னர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய டைட்டானிக் திரைப்படம் அந்த சாதனையை படைத்திருந்தது. அவதார் படத்தின் வசூல் சாதனையை சமீபத்தில் வெளியான அவெஞ்சர்ஸ் திரைப்படம்தான் முறியடித்தது.
அவதார் படத்தை பொருத்தவரை, 3 ஆஸ்கர் விருதுகளை வென்றது. இந்த படத்தின் இமாலய வெற்றியால் கடந்த 2016 ஆம் ஆண்டு அவதார் 2 படத்தை 5 பாகங்களாக எடுக்க போவதாக இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்தார். அவதார் 2 படத்தில் டைட்டானிக் புகழ் கேட் வின்ஸ்லெட், அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், வின் டீசல், ஜோ சல்தானா மற்றும் சாம் வொர்திங்டன் ஆகியோர் நடிக்கின்றனர்.
3டி தொழில்நுட்பத்துடன் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வரும் டிசம்பர் 16-ம் தேதி இரண்டாம் பாகமான 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' வெளியாகவுள்ளது. இந்நிலையில் தான், இந்தப் படம் கேரளாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
சாதாரணமாக பிற மொழிப்படங்கள் வெளியாகும்போது திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களுக்கு அதன் முதல் வாரத்தில் இருந்து 50 சதவிகிதம் முதல் 55 சதவிகிதம் வரை ஷேர் வாடிக்கையாக வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை அதற்கு மேல் வழங்கப்பட்டால் திரையரங்க உரிமையாளர்களுக்கு நஷ்டம் உண்டாகும் என்று அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில்தான் தற்போது 60% ஷேர் வேண்டும் என விநியோகஸ்தர்கள் தரப்பில் கேட்கப்பட்டதாகவும், ஆனால் இதற்கு கேரளாவில் உள்ள திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் இதனால் அங்கு அவதார் படத்தின் 2-ஆம் பாகம் வெளியாவதில் சிக்கலா? என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழும்பியுள்ளது.
எனினும் பட ரிலீஸுக்கு இன்னும் 15 நாட்கள் இருக்கும் நிலையில், இந்த விவகாரம் அதற்குள் ஒரு பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்பட்டு ஒரு சுமூகமான தீர்வை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.