பிரபல நடிகர் ஒய்.ஜி.மகேந்திராவின் மகளும், நடிகையும், பாஜக செயற்குழு உறுப்பினருமான மதுவந்தியின் வீட்டுக்கு அதிகாரிகள் வந்ததாகவும், அந்த வீட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்ததாகவும் ஒரு வீடியோ இணையதளத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் மதுவந்தி அதிகாரிகளிடம் கெஞ்சக்கூடிய காட்சிகளை காண முடிகிறது.
சென்னை தேனாம்பேட்டையில் ஒரு அபார்ட்மென்ட்டில் மதுவந்தி தனக்குச் சொந்தமான ஒரு ஃபிளாட்டில் வசிக்கும் நிலையில், ஃபைனான்ஸ் நிறுவனம் ஒன்றிடம் அவர் கடன் வாங்கிதான் இந்த வீட்டை அவர் வாங்கியதாக கூறப்பட்டு வருகிறது.
எனினும் அந்த வீட்டுக்காக ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்றும், அதிகாரிகள் பலமுறை அறிவுறுத்தியும், வலியுறுத்தியும், மதுவந்தி, நிலுவைத் தொகையான 1 கோடியே 21 லட்சத்து 30 ஆயிரத்து 867 ரூபாய் வீட்டுக்கடனை கட்ட எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், மெட்ரோ பாலிடன் அல்லிக்குளம் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட ஃபைனான்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகளின் உத்தரவுப்படி வழக்கறிஞர் மற்றும் கமிஷனர் வினோத்குமார் முன்னிலையில் மதுவந்தியின் குறிப்பிட்ட் அந்த வீடு சீல் வைக்கப்பட்ட வீடியோதான் இணையத்தில் வலம் வருவதாக சொல்லப்படுகிறது.
அந்த வீடியோவில் அதிகாரிகளிடம் பேசும் மதுவந்தி, “சார் ப்ளீஸ்.. நான் கெஞ்சி கேக்குறேன்.. எனக்கு ரொம்ப ரொம்ப அசிங்கமாக போய்விடும் சார்.. ப்ளீஸ் நான் ரிக்வெஸ்ட் பண்ணி கேட்டுக்கொள்கிறேன் சார்.. இப்போது லாக் பண்ணி விடாதீர்கள்.. நான் உங்களிடம் கெஞ்சுகிறேன்.. அதை சரி செய்கிறேன்” என்றெல்லாம் கூற, அதிகாரிகள், “எத்தனை மாதங்கள்?” என்று கேட்க, “இந்த மாதமே நான் கொடுக்கிறேன்.. இல்லை என்றால் என்னை ஜெயிலில் தள்ளுங்கள் சார்..” என்று மதுவந்தி கூறுகிறார்.
அதற்கு மீண்டும் அந்த அதிகாரிகள், “இதேதான் போன மாதம் சொன்னீர்கள்?” என்று கூறுகின்றனர். “இல்லை சார்.. கண்டிப்பாக நான் பண்ணி விடுகிறேன்.. சார் பணம் வந்து விட்டது .. நான் உங்களுக்கு செக் கொடுத்து விடுகிறேன் சார்.. உங்க காலில் வேண்டுமானால் நான் விழுகிறேன்.” என மீண்டும் மதுவந்தி கெஞ்சுகிறார்.
எனினும் இந்த வீடியோ மற்றும் அதன் பின்னணி குறித்த அதிகாரப்பூர்வ விளக்கமோ, தெளிவோ மதுவந்தி தரப்பில் இருந்து இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.