ஆர்யா, நயன்தாரா, ஜெய் மற்றும் நஸ்ரியா ஆகியோரின் நடிப்பில் உருவான 'ராஜா ராணி' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி.
ராஜா ராணி படம் கொடுத்த ஹிட் காரணமாக, நடிகர் விஜய்யை வைத்து அடுத்தடுத்து மூன்று படங்களை தொடர்ச்சியாக இயக்கவும் செய்திருந்தார் இயக்குனர் அட்லி.
முதலாவதாக, விஜய்யை வைத்து 'தெறி' என்னும் படத்தை அட்லி இயக்கி இருந்தார். இந்தப் படம் பெரிய ஹிட்டாக அமைய, அடுத்ததாக விஜய் மற்றும் அட்லி ஆகியோர், மெர்சல் படத்தில் மூலம் மீண்டும் இணைந்தனர்.
ராயப்பன் கதாபாத்திரம்
இதில் வரும் வெற்றிமாறனின் கதாபாத்திரம், மூன்று விஜய்யின் காட்சிகள், பாடல்கள் என அனைத்தும் பெரிய அளவில் ஹிட்டானது. இதனையடுத்து, மூன்றாவதாக அட்லி மற்றும் விஜய்யின் கூட்டணியில் உருவாகிய திரைப்படம் தான் 'பிகில்'. இதில் நடிகர் விஜய் கால்பந்து வீரராகவும், தந்தையாகவும் இரு வேடங்களில் நடித்திருந்தார்.
இதில் வயதான தோற்றத்தில் ராயப்பனாக விஜய் வரும் கதாபாத்திரம், பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்து இருந்தது. மிகவும் வயதான ஒரு லுக்கில், திக்கித் திக்கி பேசிக்கொண்டே விஜய் பேசும் வசனங்கள் மற்றும் சண்டைக் காட்சிகள், இன்றளவிலும் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக இருந்து வருகிறது. மேலும், ராயப்பன் கதாபாத்திரத்தை வைத்து தனியாக ஒரு படத்தை இயக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் இயக்குனர் அட்லிக்கு கோரிக்கை வைத்தும் வந்தனர்.
செஞ்சிட்டா போச்சு..
இந்நிலையில், ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் அட்லி கொடுத்த பதில் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. அமேசான் பிரைம் வீடியோ தங்களின் ட்விட்டர் பக்கத்தில், பிகில் படத்தில் வரும் காட்சி ஒன்றை வெளியிட்டு, அத்துடன், "ராயப்பனின் கதையை வைத்து மட்டும் ஒரு முழு படம் உருவாகினால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள் " எனவும் குறிப்பிட்டு இருந்தது.
இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வந்தனர். மேலும் அமேசான் பிரைம் செய்த ட்வீட்டை அட்லியும் கவனித்துள்ளார். இதனைப் பகிர்ந்த அட்லி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "செஞ்சிட்டா போச்சு" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ராயப்பனின் வசனத்தையே குறிப்பிட்டு, விரைவில் இத்திரைப்படம் இயக்கலாம் என்பது போல அட்லி தெரிவித்துள்ள இந்த பதில், தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் லைக்குகளை அள்ளி வருகிறது.