பல்வேறு இயக்குனர்களின் குறும்படங்களில் நாயகனாக ஜொலித்த அஸ்வின், தற்போது டிரைடன்ட்ஸ் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிப்பில், ‘என்ன சொல்லப் போகிறாய்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருடன் இந்த திரைப்படத்தில் தேஜூ அஸ்வினி மற்றும் புகழ் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு விவேக்-மெர்வின் இசை அமைக்கின்றனர்.
இந்தநிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அஸ்வின் பேசியது குறித்து அவர் தற்போது பிஹைண்ட்வுட்ஸ் தளத்துக்கு பிரத்தியேக விளக்கக் கருத்தை பகிர்ந்திருக்கிறார். அதில், “அனைவருக்கும் வணக்கம்! ‘என்ன சொல்லப் போகிறாய்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு பிறகு நடந்த விஷயங்கள் என்னை மிகவும் பாதித்தது, மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
என்னைக்குமே ஒரு நல்ல முன்னுதாரணமாக இல்லையென்றாலும், ஒரு கெட்ட முன்னுதாரணமாக இருந்து விடக்கூடாது என்பதை வாழ்க்கையில் நான் நினைத்துக் கொண்டே இருந்தேன். மிகவும் கஷ்டமாக இருந்தது. அன்று என்னுடைய முதல் பட விழா. அந்த விழாவுக்கு வந்தபோது மிகவும் சந்தோஷமாக இருந்தேன். விழா மேடையில் அவ்வளவு கூட்டத்திற்கு முன் பேசுவதற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஸ்டேஜில் நின்றதும் கூட்டத்தை பார்த்து நான் மிகவும் எமோஷனலாக இருந்தேன்.
அதன்பிறகு நான் மிகவும் பயந்துவிட்டேன். பொதுவாக எங்கு பேசச் சென்றாலும் பேச வேண்டிய விஷயங்களை முன்கூட்டியே எழுதி வைத்துக் கொண்டு பேசக்கூடிய பழக்கம் எனக்கு என்றுமே இருந்ததில்லை. எப்போதும்போல நார்மலாக பேசப்போகிறோம் என்று நினைத்துக் கொண்டு சென்றேன். கூட்டத்தைப் பார்த்ததும் என்ன பேசுவது என்று எனக்கு தோன்றவில்லை. மைண்ட் பிளாங்காக இருந்தது.
என்ன பேசுவது என்று தெரியாமல் அப்படியே ஆரம்பித்தேன், அப்படியே பேசிக்கொண்டு போய்க் கொண்டிருந்தேன். அப்படி பேசும்பொழுது நான் என்ன பேசுகிறேன் என்பதே தெரியாமல், சில விஷயங்கள் சொல்லிவிட்டேன். யோசிக்கவே இல்லை. நான் பேசி முடிக்கும் போது கூட நான் எதோ உளறுகிறேன் என்று கூட நான் நினைத்தேன்.
அதேமேடையில் கூட நான் குறிப்பிட்டேன், எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை, உளறுகிறேன் என்று சொன்னேன். ஆனால், நான் பேசியது நிறைய பேரைக் காயப்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள்! நிச்சயமாக நான் என்னுடைய பெஸ்ட்டை கொடுப்பேன்! நன்றி” என்று தெரிவித்திருக்கிறார்.