நடிகர் அஸ்வின் ஹீரோவாக நடிக்கும் முதல் திரைப்படம், ‘என்ன சொல்லப் போகிறாய்’. இந்த படத்துக்கான பூஜை இன்று தொடங்கியது. இந்த பூஜையில் அஸ்வின், புகழ், தேஜூ அஸ்வினி, படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
தொடக்கத்தில் சில பல குறும்படங்களில் நடித்த அஸ்வின், விஜய் டிவி சீரியல்களிலும் நடித்து வந்தார். எனினும் அஸ்வினை ஹீரோவாக பார்ப்பதற்கு ரசிகர்கள் பலரும் ஆவலாக இருந்தனர். இதனிடையே விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அஸ்வின் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் அஸ்வின் இன்னும் பெருவாரியான மக்களிடையே ரீச் ஆனார். இதனிடையே அஸ்வின் நடிக்கக்கூடிய முதல் திரைப்படம் பற்றிய தகவல்கள், குக் வித் கோமாளி இரண்டாவது சீசன் முடிந்த உடனேயே வெளியானது.
டிரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் ஹரிஹரன் இயக்கும் புதிய படத்தில் அஸ்வின் ஹீரோவாக நடிக்கிறார் என்கிற தகவல் வெளியானதுமே, அவருடைய ரசிகர்கள் குஷி ஆகிவட்டனர். அதுபற்றிய அறிவிப்புக்காக காத்திருந்தனர். தற்போது அந்த காத்திருப்புக்கு ஒரு மிகப்பெரிய ஓய்வு கிடைத்து விட்டது.
அஸ்வின் நடிக்கும் “என்ன சொல்ல போகிறாய்” திரைப்படத்தின் பட பூஜை இன்று தொடங்கியது. இந்த பட பூஜையில் அஸ்வினுடன் இந்த திரைப்படத்தில் இணைந்து நடிக்கும் கதாநாயகிகளாக தேஜூ அஸ்வினி, அவந்திகா ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் இந்த படம் முழுவதும் அஸ்வினுடன் டிராவல் செய்யக்கூடிய காமெடி கேரக்டராக நடிகர் புகழ் நடிக்கிறார். நிஜ வாழ்க்கையிலும் அஸ்வினின் நெருங்கிய நண்பரான புகழ், இந்த திரைப்படத்தில் நடிப்பது இவர்களின் காம்போ மீதான எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. இந்த திரைப்படத்துக்கு விவேக்-மெர்வின் இசை அமைக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த பூஜை நிகழ்வில் கலந்துகொண்ட அஸ்வின் பேசும்போது, “ஹீரோ என்கிற இந்த வார்த்தையை இப்போது கேட்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய பலநாள் கனவு தற்போது நனவாகி இருக்கிறது. இதுவரை கனவிலேயே வாழ்ந்து கொண்டு இருந்தேன். அதை இப்போது கண்கூடாகப் பார்க்கிறேன். நிறைய முறை நிறைய இடங்களில், கதை கேட்கும்பது இந்த கதையில் நான் ஹீரோவா என்று ஏக்கத்துடன் இருப்பேன். ஆனால் இந்த கதையில் இந்த கேரக்டர் தான் நீங்கள் செய்யப் போகிறீர்கள் என்று சொல்வார்கள். அப்படி சொல்லும்போது ஏமாற்றம் அடைந்தேன். எல்லாவற்றையும் தாண்டி தற்போது ஹீரோவாக நடிக்கும் இந்த முதல் திரைப்படம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இதற்காக என்னுடைய நண்பர்கள், நிகழ்ச்சிதாரர்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக மக்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் பேசியவர், “இந்த படத்துக்கு இசை தான் மிக முக்கியமான பலம். எனக்கு மிகவும் கம்ஃபோர்ட் பகுதியான ரொமாண்டிக் ஜானரில் நடிக்க முடியும். இப்படியான படங்களுக்கு இசை தான் அடித்தளம். இந்த படத்துக்கு விவேக்- மெர்வின் தான் இசையமப்பாளர்கள் என்றதுமே அந்த நம்பிக்கையும் வந்துவிட்டது. தல படத்தின் ஒரு பாடலில் வரும் ‘என்ன சொல்லப் போகிறாய்’ வரிகள் தான் பட டைட்டில். அந்த டைட்டிலை இசையமைப்பாளர்கள் தூக்கி நிறுத்துவார்கள என்று நம்புகிறேன்.
வாழ்க்கையில் சிலர் நமக்கு நல் வழியை காட்டுவார்கள் சிலர் நம்மை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வார்கள். இவற்றை சந்திப்பது ஒரு சவால்தான். நான் கடவுள் மீது பாரத்தை போட்டு அது என்னை அழைத்துச் செல்லும் பாதையில் சென்று கொண்டு இருக்கிறேன்!” என்று புன்னகையுடன் பேசியிருக்கிறார் அஸ்வின்.