நடிகர் அஷோக் செல்வன் சதீஷ் மற்றும் பலர் நடிக்கும் ஹாஸ்டல் எனும் புதிய திரைப்படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது.

நடிகர் அஷோக் செல்வனின் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படம் நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து அவர் அடுத்தடுத்து சில படங்களில் மும்முரமாக நடித்து வருகிறார். இதனிடையே தெலுங்கிலும் தமிழிலும் வெளியான தீனி படத்தில் ரீது வர்மா மற்றும் நித்யா மேனனுடன் இணைந்து அஷோக் செல்வன் நடித்திருந்தார். இந்த படமும் விமர்சன ரீதியாக நல்ல பெயரை பெற்றது.
இந்நிலையில் அஷோக்செல்வன் நடிக்கும் ஹாஸ்டல் திரைப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் பிரியா பவனி ஷங்கர் நாயகியாக இணைகிறார். சதீஷ் நடிக்கிறார். குறிப்பாக, இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பிரபல விஜய் டிவி நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் மூலம் அறியப்பட்ட யோகி இடம்பெற்றிருக்கிறார். எனவே படத்தில் காமெடிக்கு பஞ்சம் இல்லை என்பது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்து தெரிகிறது.
இந்த படத்துக்கு பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். போபோ சஷி இந்த படத்துக்கு இசையமைக்கிறார். ரவீந்திரன் தயாரிக்கும் இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.