முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், தற்போது டைட்டில் அறிவிப்புடன் வெளியாகி உள்ளது.
சசிகுமார் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி இருந்த 'குட்டிப்புலி' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் முத்தையா. இதன் பிறகு, கார்த்தியை வைத்து 'கொம்பன்' திரைப்படத்தை இயக்கி இருந்த முத்தையா, தொடர்ந்து விஷாலை வைத்து 'மருது' உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கி உள்ளார்.
சமீபத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் கார்த்தி - முத்தையா கூட்டணியில் வெளியான விருமன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. விருமன் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் முத்தையா அடுத்து நடிகர் ஆர்யாவுடன் புதிய படத்தில் இணைந்துள்ளார்.
இந்த படத்தில் சிதி இத்னானி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்த வெந்து தணிந்தது காடு படத்திலும் சிதி இத்னானி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முத்தையா இயக்கும் படங்கள் அனைத்திலும், கிராமம் சார்ந்த கதைக் களம் தான் இடம்பெற்றிருக்கும். 'அவன் இவன்' உள்ளிட்ட ஒருசில கிராமத்து பின்னணி கொண்ட படங்களில் நடித்திருக்கும் ஆர்யா, தற்போது முத்தையாவுடன் கைகோர்த்திருப்பதால் ரசிகர்களிடையே ஆவல் அதிகரித்திருக்கிறது. மேலும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியுள்ளது.
இந்த நிலையில், ஆர்யா - முத்தையா கூட்டணியில் உருவாகி படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது அதிகாரபூர்வமாக வெளியாகி உள்ளது.
"காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்" என இந்த படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நாற்காலி ஒன்றில் கருப்பு சட்டை மற்றும் கருப்பு லுங்கி அணிந்தபடி, கிராமத்து பின்னணி கொண்ட கதாபாத்திரத்திலும் ஆர்யா ஆவேசமாக இருக்கிறார்.
மேலும் அவர் பின்னால் உள்ள சுவற்றில் பாட்ஷா படத்தில் நடிகர் ரஜினிகாந்த்தின் புகைப்படமும் வரையப்பட்டுள்ளது. காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.