தமிழ் சினிமாவில் பாடகர், பாடல் ஆசிரியர், நடிகர், இயக்குநர் என பன்முகம் கொண்டவர் அருண்ராஜா காமராஜ். ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நெருப்புடா’ பாடலை எழுதி, பாடிய இவர், நடிகர் சிவகார்த்திகேயனின் ரெமோ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதி பாடியுள்ளார்.
முன்னதாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், தமது நண்பரும் நடிகருமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கனா திரைப்படத்தை அருண் ராஜா இயக்கி இருந்தார். தனி ஒரு கிராமப்புற பெண் தன் கிரிக்கெட் கனவை சாத்தியப்படுத்தும் இந்த படம் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக அமைந்தது.
இதனைத் தொடர்ந்து பெ.விருமாண்டி இயக்கத்தில், விஜய் சேதுபதி & ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த, ‘க/பெ ரணசிங்கம்’ திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷூடன் பயணிக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்திருந்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கத் தொடங்கினார்.
இதனிடையே கொரோனா காலத்தில், துரதிர்ஷ்டமாக அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்து உயிரிழந்த துயரம் நிகழ்ந்தது. அதன் பின்னும் அந்த துக்கத்தில் இருந்து மீள முடியாமல் இருந்த அருன்ராஜா காமராஜை அவ்வப்போது அவரது நண்பர்களின் வார்த்தைகள் தேற்றின.
இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அண்மையில் வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கினார். எப்போதும் நகைச்சுவையாக பேசவும், எழுதவும் நடிக்கவும் செய்யும் அருண்ராஜா காமராஜ், க/பெ ரணசிங்கம் படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தார்.
அப்படித்தான் நெஞ்சுக்கு நீதி எனும் சீரியஸ் திரைப்படத்தை அழுத்தமாக (இந்தியில் இருந்து தமிழிக்கு) ரீமேக் செய்ததற்காக ஏகோபித்த பாராட்டுகளை பெற்றார். இந்நிலையில்தான் அவர், ஆடி கார் ஒன்றை வாங்கி இருப்பதுடன், தம்முடைய தாயாருடன் அந்த காரின் அருகில் நின்றுகொண்டிருக்கும் புகைப்படம் தற்போது வைரல் ஆகிவருகிறது.
இதை பார்த்த அவரது நண்பர்கள், “ஆடி மாசம்.. ஆடி கார்.. வாழ்த்துக்கள் நண்பா” என்று குறிப்பிட்டுள்ளனர். அவர்களுக்கு அருண்ராஜா காமராஜ், ட்விட்டரில் நன்றி தெரிவித்துமுள்ளார்.