சென்னை: நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குநர் ஹரி கூட்டணியில் “யானை” படத்தின் OTT & சேட்டிலைட் உரிமையை முன்னணி நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

நடிகர் அருண் விஜய், தனது மாமாவான இயக்குநர் ஹரி கூட்டணியில் “யானை” திரைப்படம் முழுப்பணிகளும் விரைந்து முடிப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்ட நிலையில், படத்தின் இசை டிரெய்லர் வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்து தயாரிப்பு தரப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்திற்காக இராமேஸ்வரம், தூத்துகுடி, காரைக்குடி, பழனி மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. நடிகர் அருண் விஜய் இதுவரை ஏற்றிராத வேடத்தில் நடித்துள்ளார். கிராமம் மற்றும் நகர பின்னணியில் தன் வழக்கமான பரபர திரைக்கதையுடன் இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஹரி. இந்நிலையில் யானை படம் பற்றிய அறிவிப்புகளை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த யானை படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் OTT டிஜிட்டல் உரிமையை ஜி குரூப் கைப்பற்றி உள்ளது. ZEE5 OTT & ZEE தமிழ் தொலைக்காட்சிகளில் இந்த படம் வரும் நாட்களில் ஒளிபரப்பாகும்.
இந்த படத்தில் அருண்விஜய் உடன், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், கருடா ராம், புகழ், தலைவாசல்விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, ஐஸ்வர்யா, போஸ் வெங்கட், ஜெயபாலன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இது அருண் விஜய் நடிக்கும் 33வது படமாகும். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் செப்டம்பர் 9ஆம் தேதி விநாயகர் சதூர்த்திக்கு வெளியானது. போஸ்டர்கள், சிங்கிள் பாடல் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றன.