தனது மாமாவான இயக்குனர் ஹரியுடன் அருண் விஜய் முதல் முறையாக இணையும் படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார், இவர்களுடன் சமுத்திரக்கனி, யோகி பாபு, ராதிகா சரத்குமார்,புகழ், அம்மு அபிராமி மற்றும் 'கேஜிஎஃப்' புகழ் கருடா ராம் ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம், காரைக்குடி, பழனி பகுதிகளில் நடந்தது. தற்போது இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் இன்று செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது. அதனை ஒட்டி இந்த படத்தின் முதல் லுக் போஸ்டரை 33 திரைப்பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர். இது அருண் விஜய் நடிக்கும் 33வது படமாகும்.
இந்த படத்திற்கு யானை என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் படத்தின் முதல் லுக் போஸ்டர்களில் ரத்தம் சொட்டும் சங்கும், மலர் மாலையுடன் அருண்விஜய் இருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்ற இரண்டு போஸ்டரில் விநாயகருடனும், கையில் அரிவாளுடனும் உள்ளார்.