தனது மாமாவான இயக்குனர் ஹரியுடன் அருண் விஜய் முதல் முறையாக இணையும் படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
இப்போது 'ஏ.வி 33' என்று பெயரிடப்பட்டுள்ள படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் சில நாட்களுக்கு முன் மீண்டும் தொடங்கியது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே காரைக்குடி பகுதிகளிலும் நடந்தது. அதனைத்தொடர்ந்து பழனியில் படப்பிடிப்பை படக்குழு நடத்தியது. பழனி படப்பிடிப்பில் நடிகர் சமுத்திரக்கனி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.
இந்நிலையில் நடிகர் அருண்விஜய் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நாகையில் நடைபெறுவதாக அறிவித்துள்ளார்.
மேலும் படப்பிடிப்பின் இடைவெளியில் கேரம் போர்டு விளையாடும் BTS புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார்.
நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார்.
இவர்களுடன் பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ராதிகா சரத்குமார்,புகழ், அம்மு அபிராமி மற்றும் 'கேஜிஎஃப்' புகழ் கருடா ராம் ஆகியோர் நடிக்கின்றனர்.