இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட Independent தனியிசைப் பாடல் 'என்ஜாய் எஞ்சாமி' பாடல்.
உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த பாடலை பாடகி தீ மற்றும் ராப் பாடகர் அறிவு ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடல் YouTube-ல் 276 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், குறிப்பாக Spotify-ல் 15 மில்லியனுக்கும் அதிகமான ஸ்ட்ரீம்களையும் கொண்டுள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மாஜா தயாரித்த இந்த ஆல்பம் பாடல் ராப்பர் அறிவுவின் பாட்டியான வள்ளியம்மா மற்றும் ஒடுக்கப்பட்ட, அதே சமயம் சுரண்டப்பட்ட பல மக்களின் வாழ்வியலை பேசுகிறது.
இந்நிலையில் தான் இந்த புகழ்பெற்ற 'என்ஜாய் எஞ்சாமி' பாடலில் தோன்றிய பாடகர் பாக்கியம்மா காலமானார் என்ற சோகமான செய்தியை அறிவு தம் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "பாக்கியம்மா, இழந்த பல உயிர்களுக்காக உங்கள் இதயத்தில் இருந்து நீங்கள் பாடியுள்ளீர்கள். இப்போது உங்கள் அகால இழப்புக்கான வார்த்தைகள் இல்லாமல் சிரமப்படுகிறேன். கலைஞர் இறக்கக்கூடும், ஆனால் அவளுடைய கலை எப்போதும் நம் இதயத்தில் நிலைத்திருக்கும். நீங்கள் இதுபோன்ற ஒரு உத்வேகம். #roots #opparishow #therukural #vaanam #margaliyilmakkalisai மற்றும் #enjoyenjaami ஆகிய படைப்புகளில் உங்கள் சக்திவாய்ந்த நடிப்புக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.!" என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், பாடகி 'தீ' தமது இரங்கல் பதிவில், "ஒரு அற்புதமான ஆத்மா மற்றும் கலைஞர். அமைதியாக இருங்கள் பாக்கியம்மா பாட்டி" என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் கூட, உலக இசை தினத்தன்று, டி.ஜே. ஸ்னேக், இந்த சூப்பர் ஹிட் பாடலை ரீமிக்ஸ் செய்தார். இந்த ரீமிக்ஸ் செய்யப்பட்ட பதிப்பு, விரைவில் வைரலாகி, டைம்ஸ்குவேர் பில்போர்டில் இடம்பெற்றது. இதுபோன்ற ஒரு சாதனையை நிகழ்த்திய முதல் தமிழ் சுதந்திரமான தனியிசைப் பாடல் என்ற பெருமையை என்ஜாய் எஞ்சாமி பாடல் பெற்றது.