அர்ச்சனாவுக்கு தொகுப்பாளினியாக அறிமுகமே தேவையில்லை. சன் டிவியில் ஒளிபரப்பான 'காமெடி டைம்' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதன்பின்பு 'இளமை புதுமை' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 2004-ஆம் ஆண்டு வினித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்பு மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 'ச ரி க மா' ஷோவில் மீண்டும் வந்தார். அவரும் அவரது மகளும் சேர்ந்து தொகுத்து வழங்கிய 'சூப்பர் மாம்' என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலம்.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் விஜய் டிவியில் காதலர் தினத்தன்று ஒளிபரப்பாக இருக்கும் 'காதலே காதலே' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியுள்ளார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. எனவே இனி விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் அவர் தொகுப்பாளராக பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த 'பூவே பூச்சூடவா' என்ற தொடரின் மூலம் பிரபலமடைந்த மதன் மற்றும் ரேஷ்மா சமீபத்தில் தங்கள் காதலை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில் இந்த ஜோடி தற்போது விஜய் டிவியில் நடைபெறும் இந்த காதலே காதலே நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.