தமிழில் பேய் படங்களை கூட, குழந்தைகளும் கொண்டாடி பார்க்கும் வண்ணம் மாற்றிய படம் தான் அரண்மனை வரிசை திரைப்படம். நகைச்சுவை படங்களுக்கு, பெயர் பெற்றவர் இயக்குநர் சுந்தர்.சி.
இவரது இயக்கத்தில் அரண்மனை முதல் இரண்டு பாகங்களும் பிரம்மாண்ட வெற்றி பெற்ற நிலையில், தற்போது ஆர்யா நடிப்பில் அரண்மனை-3 ரிலிஸுக்கு தயாராகியுள்ளது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீசுக்கு பிறகு நேற்று வெளியான #Ratatapata பாடல் ஹிட் ஆகியுள்ளது. ஆர்யா-ராஷி கண்ணா இடம் பெறும் இந்த பாடல் நேற்று இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது. இயக்குநர் சுந்தர்.சியின் இந்த பிரம்மாண்ட பாடல் காட்சி யூடியூபில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வெற்றி கண்டுள்ளது.
இப்படத்தை இணைய ஓடிடி தளத்தில் வாங்குவதில் போட்டிகள் இருந்தாலும், படத்தை தியேட்டரில் தான் வெளியிட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தார் சுந்தர்.சி. இந்நிலையில் திரைத்துறையில் படத்தை பார்த்த சில முக்கியஸ்தர்கள், “இப்படம் குடும்பத்தோடு திரையரங்கில் கொண்டாட்டமாக பார்க்க வேண்டிய படம், எனவே இதனை திரைக்கு கொண்டு வாருங்கள்” என்றனர்.
இதனைத் தொடர்ந்து அரண்மனை-3 படத்தை திரையரங்கில் வெளியிடும் வேலைகளை செய்து வருகிறார் இப்படத்தின் இயக்குநர் சுந்தர்.சி. அரண்மனை-3 படம் முதல் இரண்டு பாகங்களை விட இரு மடங்கு பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமான வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு பாகங்களை குழந்தைகள் கொண்டாடிய நிலையில், இப்படமும் குழந்தைகளுக்கும் குடும்பங்களுக்கும் பிடிக்கும் வகையிலான மிகச்சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாக்கியுள்ளனர்.
ஆர்யா, ராஷி கண்ணா, சுந்தர்.சி முதன்மை பாத்திரங்களில் நடிக்க, (மறைந்த) நடிகர் விவேக், யோகி பாபு, சாக்ஷி அகர்வால், சம்பத், மனோபாலா, வின்சென்ட் அசோகன், மதுசூதன ராவ், வேலராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத், கோலப்பள்ளி லீலா ஆகியோர் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர். திரை கொள்ளாத அளவில் பெரும் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இடம் பெற்றுள்ளனர்.
தவிர, முதல் முறையாக இயக்குநர் சுந்தர்.சி-யும், இந்தியாவின் முக்கிய சண்டைப்பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்னும் இப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி மட்டுமே 1.5 கோடி ரூபாய் செலவில், 300 தொழிலாளர்கள் கொண்டு உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட செட்டில், 200 கலைஞர்கள் பங்கேற்க, 16 நாட்கள் படமாக்கப்பட்டது. படத்தின் அதி முக்கியமான, இந்த க்ளைமாக்ஸ் காட்சியின் CG பணிகள் மட்டுமே, 6 மாதங்கள் நடைபெற்றது. படத்தின் அனைத்து பணிகளும் சமீபத்தில் முடிந்த நிலையில் படத்தின் வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
C.சத்யா இசையமைக்கும் இந்த படத்துக்கு UK செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பை கவனித்துக்கொள்ள, பீட்டர் ஹெய்ன், தளபதி தினேஷ், பிரதீப் தினேஷ் சண்டை பயிற்சி அளித்துள்ளனர். பிருந்தா, தினேஷ் நடன பயிற்சி அளித்துள்ளனர். ஆவ்னி சினிமேக்ஸ் தயாரிப்பில் குஷ்பு சுந்தர் இப்படத்தை தயாரித்துள்ளார். Source: ஜான்சன், PRO.