இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் சமீபத்தில் தங்கள் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவுகளின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளனர்.
Also Read | Repeat Repeat Repeat”… திரும்ப திரும்ப வரும் ரசிகர்கள்…. டிரீம் வாரியர்ஸ் வெளியிட்ட மாஸான KGF 2 pic!
இசைப்புயலின் ’தமிழணங்கு’…
தமிழ் மற்றும் இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராகக் கருதப்படும் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் சமீபத்தில் ஓவியர் ’சந்தோஷ் நாராயணன்’ வரைந்த, பாரதி தாசனின் "இன்பத் தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர்" எனும் வரிகள் பதித்த ழகரம் ஏந்திய தமிழணங்கு எனும் ஒரு ஓவியத்தை பகிர்ந்திருந்தார். இதையடுத்து பலரும் அந்த ஓவியத்தைப் பகிர அது இணையத்தில் வைரலானது.
அதையடுத்து “இந்திதான் இந்தியாவின் இணைப்பு மொழி” என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியது குறித்து தெரிவித்த கருத்தில் “தமிழ் தான் இந்தியாவின் இணைப்பு மொழி” என AR ரஹ்மான் கூறினார். இதையடுத்து அவருக்கு தமிழ் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புக் கிடைத்தது.
’கருப்பு திராவிடன்’ யுவன்…
ரஹ்மானின் பதிவு குறித்த விவாதங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா பகிர்ந்த புகைப்படமும், அதில் அவரின் கேப்ஷனும் கவனத்தை ஈர்த்துள்ளது. இது தொடர்பாக யுவன் பகிர்ந்த புகைப்படத்தில் கருப்பு டீ ஷர்ட் ஒன்றுடன் லுங்கி அணிந்து கொண்டு, கடற்கரை ஒன்றின் ஓரம் நிற்கிறார். யுவன் ஷங்கர் ராஜா, அதற்கான கேப்ஷனில், "Dark Dravidian , Proud Tamizhan" (கருப்பு திராவிடன், பெருமைக்குரிய தமிழன்) என குறிப்பிட்டு இருந்தார்.
யுவன் ஷங்கர் ராஜாவின் இந்த புகைப்படம் மற்றும் கேப்ஷன், தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக தங்களின் கருத்துக்களையும் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர். ரஹ்மானின் தமிழணங்கு பதிவுக்கு நடந்தது போல இதற்கும் பல விதமான கருத்துகள் மற்றும் ஊகங்கள் உருவாகி, விவாதங்கள் நடந்து வருகின்றன.
இந்தி தெரியாது …
யுவன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட புகைப்படம் ஒன்றும் இதே போல ட்ரண்ட் ஆனது. அந்த புகைப்படத்தில் யுவன், ”தமிழ் பேசும் இந்தியன்” என்ற வாசகம் இடம்பெற்றிருந்த டி ஷர்ட் அணிந்தும் அவருடன் இருந்த மெட்ரோ படத்தின் ஹீரோ ஸ்ரீரிஷ் "ஹிந்தி தெரியாது போடா" என்ற வாசகம் இடம்பெற்றிருந்த டீ ஷர்ட்டையும் அணிந்து காணப்பட்டனர். அதையடுத்து பலரும் அதுபோல வாசகங்களைக் கொண்ட டிஷர்ட்டை அணிய ஆரம்பித்தனர்.
அப்போது அதுபற்றி விளக்கம் அளித்த யுவன், “இந்தி மொழி மேல் மரியாதை உண்டு. ஆனால் எனக்கு இந்தி தெரியாது என்றால், பேச சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது என்பதைதான் அந்த டிஷர்ட் மூலமாகக் கூறியிருந்தேன்" என விளக்கம் அளித்திருந்தார்.
இப்படி இரு முன்னணி இசையமைப்பாளர்கள் தமிழ் உணர்வுக்கு ஆதரவாக தங்கள் கருத்துகளை பகிர்ந்திருப்பதை அடுத்து தமிழ் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுள்ளனர்.
Also Read | “நங்கை கொண்ட விரல்கள் அதிசயமே”…. நயனுடன் ரொமான்ஸ்.. விக்னேஷ் சிவனின் வைரல் story !