7 ஆண்டுகளுக்கு பிறகு இசைப்புயல் AR ரஹ்மானின் இசை நிகழ்ச்சி பிரமாண்டமாக மலேஷியா கோலாலம்பூரில் நடப்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் இருவர், ரோஜா ஆகிய திரைப்படங்களின் மூலம் இசையுலகில் மிகப்பெரிய பாய்ச்சலாய் அறிமுகமாகி பிரபலமானவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். பின்னாலில் இந்திய இசையமைப்பாளர் என்கிற புகழ்பெற்று இந்தியாவில் மட்டுமல்லாது ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ஆஸ்கர் விருது உட்பட பல விருதுகளை வென்றிருக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழிலும் இந்தியிலும் முன்னணி நடிகர்கள் மற்றும் முன்னணி இயக்குனர்களின் திரைப்படங்களில் பணிபுரிந்து இருக்கிறார்.
இந்திய அளவில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், தமிழை பொருத்தவரை இயக்குநர் பாரதிராஜா, இயக்குனர் மணிரத்தினம், இயக்குனர் சங்கர், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் தொடங்கி அண்மை காலங்களில் இயக்குனர் கௌதம் மேனன், இயக்குநர் அட்லி, இயக்குநர் ரவிக்குமார் (அயலான்), இயக்குனர் பார்த்திபன் ஆகியோரின் திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் கடைசியாக பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் திரைப்படம் வெளியானது. தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதே போல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் மணிரத்னம் இயக்கத்தில், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி பன்மொழிகளில் வெளியாகிறது.
இந்த நிலையில்தான் மலேசியாவில் நடக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. வெளிநாடுகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர். குறிப்பாக அவர் நேரடியாக பங்கேற்கும் இசை நிகழ்ச்சியை காண்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர். அந்த வகையில் அவருடைய இசை நிகழ்ச்சி பிரமாண்டமாக மலேஷியா கோலாலம்பூரில் நடப்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பை மிகவும் புதுமையான முறையில் DMY creation நிறுவனர் டாட்டோ முகமது யூசஃப் என்பவர், 10 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து எலிகாப்டர் மூலமாக பாரசூட்டில் இருந்து குதித்து இந்த அறிவிப்பை வெளியிட்டார். இப்படியான முறையில் வெளியிடுவது மலேஷியாவில் இதுவே முதல் முறை ஆகும். இந்த சாதனை ‘மலேஷியா புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ‘அதிக உயரத்தில் இருந்து குதிக்கப்பட்ட சாதனையாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி வருகின்ற 2023 ஜனவரி மாதம் 28 ஆம் தேதி நடக்கின்றது.