கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, முன்னணி இயக்குனரான மணிரத்னம், பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இதன் முதல் பாகமான 'பொன்னியின் செல்வன் - பாகம் 1', செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரை அரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, லால், ஜெயராம், ரஹ்மான் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.
இது தவிர மற்ற கதாபாத்திரங்களில் யார் யார் எல்லாம் நடிக்கிறார்கள் என்பது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பும் அடுத்தடுத்து தினங்களில் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரவிவர்மன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், தற்போது இந்த படத்தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழா, நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர்கள் ஷங்கர், மிஷ்கின், நடிகை அதிதி ராவ் என ஏராளமான திரை பிரபலங்கள், பொன்னியின் செல்வன் படத்தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், பொன்னியின் செல்வன் படத்தின் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, நாசர், ரஹ்மான், பார்த்திபன், ஜெயராம், விக்ரம் பிரபு, நடிகைகள் த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சிக்கு வந்த இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து பேசுகையில், "ஒரு 10 வருடத்துக்கு முன்பே இந்த படத்திற்கான வேலைகளை ஆரம்பித்தோம். பின்னர் அது நின்று போனது. இப்படத்துக்காக பல விதமான இசை வடிவங்களை முயற்சி செய்து, கடைசியில் இப்படி செய்தால் இன்னும் ரீச் இருக்கும், நிறைய மக்களை சென்றடையும் என யோசித்தோம், மணிசாரின் கிரியேடிவ் முடிவு இறுதியாக அமைந்தது" எனகூறினார்.
தொடர்ந்து, இயக்குனர் மணிரத்னம் பற்றி பேசிய ஏ. ஆர். ரஹ்மான், "மணிரத்னம் சார் கடந்த 40 ஆண்டுகளாக திரை உலகில் இருந்து வருகிறார். எப்போது படம் எடுத்தாலும் ஒரு புதிய இயக்குனர் போல படத்தை இயக்குகிறார்.
தற்போதுள்ள பிலிம் இண்டஸ்ட்ரிக்கு ஏற்ற வகையில், நிறைய தற்கால பார்வையாளர்களிடையே அதிக அளவில் போய் சேர வேண்டும் என்ற நோக்கிலும், அதே சமயம் நமது பாரம்பரிய விஷயம் அனைத்தும் இருக்க வேண்டும் என பிலிம் சென்சிபிலிட்டியுடன் சேர்த்து இதனை உருவாக்கி உள்ளோம்" என்றார். தொடர்ந்து, பொன்னியின் செல்வன் நாவல் பற்றி பேசிய ஏ.ஆர். ரஹ்மான், "ஒவ்வொரு காலகட்டத்திலும் பொன்னியின் செல்வன் நாவல் படிக்கும் போது, ஒருவித உணர்வு வரும். இந்த காலகட்டத்திற்கு ஏற்றது போல, அதில் உள்ள சிறந்த விஷயங்கள் அனைத்தையும் சேர்த்து, மணி சார் இந்த படத்தை உருவாக்கி உள்ளார்" என கூறினார்.