மலையாளத்தில் மகேஷிண்டே பிரதிகாரம் (2016), சண்டே ஹாலிடே (2017) ஆகிய படங்களில் நடித்ததற்காக பிரபலமாக அறியப்பட்டவர் நடிகை அபர்ணா பாலமுரளி.
8 தோட்டாக்கள் (2017) படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த சர்வம் தாள மயம் (2019) என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். மலையாளத்தில் அவரது அடுத்தடுத்த படங்கள் திருசிவபேரூர் கிளிப்தம் (2017), மிஸ்டர் & மிஸ் ரவுடி (2019) மற்றும் ஜீம் பூம் பா (2019) இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.
இதனைத் தொடர்ந்து சூர்யா நடித்த சூரரைப் போற்று (2020) படத்தில் நாயகி கதாபாத்திரமான பொம்மியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்ததற்காக 2022 ஆம் ஆண்டில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார். அபர்ணா பாலமுரளி, தற்போது மலையாளத்தில் தங்கம் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகவுள்ள ‘தங்கம்’ படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி எர்ணாகுளம் சட்டக் கல்லூரியில் நடைபெற்றது.
அந்த நிகழ்வில் சட்டக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அபர்ணா பாலமுரளிக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்றார், பின்னர் அந்த மாணவர் அபர்ணா தோள் மீது கையை வைத்து புகைப்படம் எடுக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அபர்ணா பாலமுரளி, சற்று சுதாரித்துக் கொண்டு அந்த நபரிடமிருந்து விலகினார். இச்செயலுக்கு அந்த நபர் நடிகை அபர்ணா பாலமுரளியிடம் மன்னிப்பு கேட்டுகொண்டார்.
இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் மாணவர் மீது கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், எர்ணாகுளம் சட்டக் கல்லூரி மாணவர் சங்கம் தனது முகநூல் பக்கத்தில் நடிகை அபர்ணா பாலமுரளியிடம் மன்னிப்புக் கேட்டுள்ளனர். "எர்ணாகுளம் அரசு சட்டக்கல்லூரியில் அன்று (18/01/2023) நடைபெற்ற யூனியன் பதவியேற்பு விழாவில், மாணவர் ஒருவர் திரைப்பட நட்சத்திரத்திற்கு எதிராக அநாகரீகமான சம்பவத்தை நடத்தியது மிகவும் வருத்தமளிக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக நடிகருக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு கல்லூரி மாணவர் சங்கம் மனதார வருந்துகிறது". என அந்த சட்டக் கல்லூரி மாணவர்கள் சங்கம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அந்த நபர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து இன்னொரு பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்டபோது பதில் அளித்த அபர்ணா பாலமுரளி, “நீங்கள் வீடியோவில் பார்த்தது உண்மைதான். முன்பின் தெரியாத ஒருவர் தோள்மேல் கைபோடும்போது அசௌகரியமாகவும் வெறுப்பூட்டுகிற வகையிலும் இருந்தது. அவர் மீண்டும் மன்னிப்பு கேட்க வந்து அவர் பேசும்போது, முதலில் ஒருவரை பார்த்து வந்த ஒரு அச்சவுணர்வு தான் மேலோங்கியது. ஒவ்வொருவரும் சமூகத்தில் நன்னடத்தையுடன் வரவேண்டும் என்றால் மாற்றிக்கொள்வார்கள்.
இதுபற்றி மேற்கொண்டு புகார்களை நான் கொடுக்கவில்லை. அது சட்டக்கல்லூரி என்பதால் அவர்களுக்கே தெரியும், என்ன செய்ய வேண்டுமென, அம்மாணவரை சஸ்பெண்டும் செய்துவிட்டார்கள். இதில் கல்லூரியில் தாமாக முன்வந்து எடுக்கப்பட்ட நடவடிக்கையே போதுமானதாக இருந்தது. ” என குறிப்பிட்டுள்ளார்.