2020 ஆம் ஆண்டுக்கான 68 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, புது டில்லியில் இன்று (30.09.2022) நடைபெற்றது.
ஜனாதிபதி திரௌபதி முர்மு விழாவுக்கு தலைமை தாங்கி திரைக்கலைஞர்களுக்கு விருது வழங்கினார். மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல்.முருகன், இயக்குனர் பிரியதர்ஷன் ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர். இதில் தமிழகத்தை சார்ந்த சினிமா கலைஞர்கள் விருது பெற்றனர்.
சூரரைப் போற்று படத்தில் நடித்ததற்காக நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும், சிறந்த நடிகைக்கான தேசிய விருதை அபர்ணா பாலமுரளியும், சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை ஜி.வி.பிரகாஷ் குமார் வென்றுள்ளார்.
மேலும், சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை சுதா கொங்கரா, ஷாலினி உஷாதேவி ஆகியோர் வென்றனர். மேலும் சிறந்த படத்திற்கான தேசிய விருதை 2டி நிறுவனம் கைப்பற்றியது.
சில நாட்களுக்கு முன் டெல்லியில் நடந்த 68வது திரைப்பட விருதுகள் அறிவிக்கும் நிகழ்வில் இதனை மத்திய அரசு சார்பில் தகவல் & ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவித்தது.
இந்நிலையில் இன்று புது டெல்லியில் நடைபெற்ற 68 வது தேசிய விருது வழங்கும் விழாவில் சூரரைப் போற்று படத்திற்காக சூர்யா, ஜோதிகா, சுதா கொங்கரா, அபர்ணா பாலமுரளி, ஜி.வி பிரகாஷ் குமார், ஷாலினி உஷா தேவி ஆகியோர் தேசிய விருதை பெற்றனர்.
விருது வழங்கும் விழாவில் இயக்குனர் சுதா கொங்கரா & அபர்ணா பாலமுரளி எடுத்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றன.
கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 12-ல் சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் தியேட்டர் வெளியீட்டை தவிர்த்து நேரடியாக அமேசான் பிரைம் ஒடிடியில் வெளிவந்த சூரரைப் போற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.