பிரபல நடிகர் தன்னுடைய 70 வயதில் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததை அடுத்து அவருக்கு பிரபலங்கள் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2007ஆம் ஆண்டு தெலுங்கு திரை உலகில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் வேதம். தமிழில் இந்தப் படம்தான் வானம் என்கிற பெயரில் சிம்பு, பரத், அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியானது.
வேதம் படத்தில் தான் நடித்த அதே கதாபாத்திரத்தில் தான் தமிழிலும் வானம் படத்தில் அனுஷ்கா நடித்திருந்தார். இதனிடையே வேதம் படத்தில் ராமு என்கிற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் நாகையா, தாம் வயதாகி நடித்திருந்தாலும் இந்த படத்தில் தமது அழுத்தமான அறிமுக நடிப்பை கொடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஸ்பைடர், மீண்டும் அனுஷ்கா நடித்த பாகமதி உள்ளிட்ட படங்களிலும் நாகையா நடித்திருந்தார். ஆனாலும் அவர் வேதம் படத்தின் மூலம் அடையாளப்படுத்தப்பட்டதால், வேதம் நாகையா என்கிற பெயரிலேயே தெலுங்கு ரசிகர்களால் அழைக்கப்பட்டார். இந்த நிலையில் மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட வேதம் நாகையா சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தற்போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர் தொடர்ந்து இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தன்னுடைய முதல் படத்தில் நடிகை அனுஷ்காவுடன் நடித்த வேதம் நாகையாவுக்கு அனுஷ்காவும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருந்தார்.
அதில், “நல்ல ஆத்மா நம்மை விட்டு சென்றது. அவர் நிச்சயம் சொர்க்கத்திற்குச் செல்வார். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று பகிர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.