பாலிவுட்டில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப். இவர் தமிழில் நயன்தாரா, அதர்வா நடித்த 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லனாக மிரட்டலான நடிப்பை வழங்கியிருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் 'காலா' மற்றும் 'பரியேறும் பெருமாள்' படங்களை பார்த்த அனுராக், இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு மும்பையில் விருந்தளித்திருக்கிறார்.
இந்த சந்திப்பில் இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "காலா" திரைப்படம் குறித்து சிலாகித்து பேசியிருக்கிறார். அந்த படத்தின் அரசியல், தொழில்நுட்ப நேர்த்தி ஆகியவை குறித்தும் விரிவாக பேசியிருக்கிறார். மேலும் பா.இரஞ்சித் தயாரித்து, மாரி செல்வராஜ்
இயக்கத்தில் உருவான 'பரியேறும் பெருமாள்' படம் குறித்தும் சிலாகித்து பேசியுள்ளார்.
இந்திய சமூகத்தில் சாதிய ஏற்றத்தாழ்வு, வர்க்கம் , பெண்ணடிமைத்தனம் குறித்து கலைஞர்களுக்கு சரியான புரிதல் வேண்டும். கலைஞர்கள் அதை கவனத்தில் கொள்ளவேண்டும். நாம் செய்யவேண்டிய பணிகள் நிறைய இருக்கிறது.
"இந்திய அளவில் தலித் அரசியலை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் துணிச்சலாகவும் பேசக்கூடிய படைப்பாளியான உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்" என்றும் தனது விருப்பத்தினை தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து ட்விட்டரில் அனுராக்குடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்த ரஞ்சித், 'நான் உங்கள் படங்களின் தீவிர ரசிகன். இந்த மாலையை உங்களுடன் பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி. மேலும், உங்களுக்கு காலா பிடித்திருந்ததில் எனக்கு பெருமை. உரையாடல்களுக்கும் உணவிற்கும் நன்றி என்று தெரிவித்திருந்தார்.
இதனை பகிர்ந்த அனுராக் காஷ்யப், 'காலா' திரைப்படத்தை மிகத் தாமதமாக காணும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தற்போது உங்களது எல்லா படங்களையும் பார்க்க வேண்டும் போல் உள்ளது'. என்று தெரிவித்துள்ளார்.