பிரபல இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப், தமிழில் அதர்வா, நயன்தாரா நடித்த 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லனாக மிரட்டலான நடிப்பை வழங்கியிருந்தார். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மகளுக்கு இன்ஸ்டாகிராமில் வந்த மிரட்டல் குறித்து குற்றச்சாட்டு தெரிவித்தார். அந்த பதிவில் பிரதமர் மோடியிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் பிரபல நடிகை சுச்சித்ரா கிருஷ்ணமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், அன்புள்ள அனுராக் காஷ்யப் அவர்களே, நான் வெளிப்படையாக மோடிக்கு ஆதரவளிக்கிறேன். ஒருவேளை எனக்கோ அல்லது என் மகளுக்கோ பிரச்சனை என்றால் மும்பை காவல்துறையிடமும், சைபர் கிரைமிடமும் புகார் அளிப்பேன். பிரதமரை குறிப்பிடமாட்டேன். உங்கள் கருத்து என்ன ? என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த அனுராக், இதில் முரண் என்னவென்றால் பிரச்சனைகளை சொன்னால் பிரதமருக்கு வாக்களியுங்கள் என்கிறார்கள் . ஆனால் ட்விட்டில் பிரதமரை குறிப்பிட்டால், அது அவருடைய பொறுப்பு அல்ல, உங்கள் தொகுதிக்கு செல்லுங்கள் என்கிறார்கள்' என்றார்.
மேலும், என்னுடைய குற்றபத்திரிக்கை பதிவு செய்ய உதவிய மும்பை காவல்துறையினருக்கும் சைபர் கிரைமிற்கும் நன்றி. எனக்கு ஆதரவளித்தமைக்கு நன்றி. மேலும் மஹாராஷ்டிரா முதல்வர், தேவேந்திர பட்னாவிஸ் அவர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி. ஒரு தந்தையாக நான் பாதுகாப்பாக உணர்கிறேன். என்றார்.
மற்றொரு பதிவில், 'காரணம் இல்லாமல் வெறுப்பவர்களை கண்டுகொள்ளமாட்டேன் என மோடி ஒரு அறிக்கைவிட்டால் அவர்கள் இனிமேல் எதுவும் பேசமாட்டார்கள்' என்று தெரிவித்தார்.