கடந்த 2019-ஆம் ஆண்டில் மிஸ் கேரளா பட்டம் வென்றவர் ஆன்சி கபீர். இவரும் இதே அழகி போட்டியில் 2வது இடத்தை பிடித்த அஞ்சனா ஷாஜன் என்பவரும் நெருங்கிய தோழிகள்
இதில் ஆன்சி திருவனந்தபுரத்தை சேர்ந்தவர். அஞ்சனா திருச்சூரை சேர்ந்தவர். இவர்கள் நேற்று அதிகாலையில் எர்ணாகுளம் பைபாஸ் சாலையில் சென்றபோது, முன்னால் வந்த பைக் மீது மோதிவிடாமல் இருக்க, காரை சட்டென்று திருப்ப, கார் சாலையோரம் இருந்த மரத்தில் பலமாக மோதி நொறுங்கியது.
இந்த கோர விபத்தில், ஆன்சி கபீர், அஞ்சனா ஷாஜன் இருவருமே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் எர்ணாகுளம் மெடிக்கல் சென்டரில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிரமான சிகிச்சை நடந்து வருகிறது.
இதனிடையே விபத்தில் இறப்பதற்கு சில மணி நேரம் முன்பு ஆன்சி பதிவிட்ட இன்ஸ்டராகிராம் போஸ்ட் சோகத்தை ஏற்படுத்தியது.. அந்த வீடியோவில் ஒரு அடர்ந்த காட்டுக்குள் நடந்து செல்லும் ஆன்சி, “இது போவதற்கான நேரம்” (It's time to go) என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த தகவலை அக்கம் பக்கத்தினர் சொல்லி, தாமதாமாக கேள்விப்பட்ட ஆன்சியின் அம்மா ரசீனா கதறி அழுததுடன், ரூமுக்குள் ஓடிச் சென்று கதவை பூட்டிக் கொண்டார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த போலீஸார், ரசீனாவின் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே செல்ல, ரசீனா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்கொலை என்பது எதற்கும் தீர்வோ, முடிவோ அல்ல. மனித உயிரை மாய்த்துக் கொள்வது நமக்கும் நம் சார்ந்தவர்க்கும் பேரிழப்பு. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.