சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், தீபாவளி வெளியீடாக நேரடியாக திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘அண்ணாத்த’.
அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்ட இந்த படத்தில் ரஜினி - கீர்த்தி சுரேஷ் அண்ணன் தங்கையாக நடித்துள்ளனர். நயன்தாரா, ரஜினியை காதல் செய்வதாகவும், ரஜினி, தன் தங்கை கீர்த்தி சுரேஷின் திருமண வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனையை எதிர்கொள்ள கல்கத்தா செல்வதாகவும் என படம் படு கமர்ஷியலாக எடுக்கப்பட்டுள்ள குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படம்.
தவிர, இப்படத்தில் மீனா, குஷ்பு, சூரி, வேல ராம மூர்த்தி, பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். வெற்றி பழனிசாமியின் ஒளிப்பதிவு, கலை இயக்குனர் மிலனின் கைவண்ணத்தில் கலர்ஃபுல் செட், எடிட்டர் ரூபனின் கச்சிதமான பணி, ஆக்ஷன் செண்டிமெண்ட் என இசையமைப்பாளர் டி.இமானின் வெரைட்டியான இசை மற்றும் பாடல்கள் அனைத்தும் அண்ணாத்த படத்தில் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் அண்ணாத்த படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவா, பிஹைண்ட்வுட்ஸ்க்கு பிரத்தியேகமாக அளித்த பேட்டியில் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், “முதல் பாதியில் நயன்தாரா, கதையில் கீர்த்தி சுரேஷை சந்திப்பது போல காட்சிகள் இல்லை. நயன்தாரா & ரஜினி சந்தித்துக் கொள்கிறார்கள். அதன்பிறகு தங்கை பற்றிய கதை செல்கிறது. எனவே நயன்தாரா - கீர்த்தி சுரேஷ் சந்திக்கிற காட்சிகள் கல்கத்தாவில் தான் நடப்பதாக காட்டப்படுகிறது. காளையன் கதாபாத்திரத்தை பொறுத்தவரை தான் இருக்கும் இடத்தில் தன்னைப்போல ஒரு ஆளுமையான ஒருவரை தனக்கு பதிலாக வைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட, அவர் அதற்காக பட்டம்மாளை தேர்வு செய்கிறார். அதுதான் கான்செப்ட். அதனால் தான் கீர்த்தி சுரேஷ் மற்றும் நயன்தாரா இருவரும் சந்தித்துக் கொள்ளும் காட்சிகள் முதற்பாதியில் வைக்கவில்லை.
விஸ்வாசத்தின் தாக்கம் அண்ணாத்த படத்தில் இருப்பதற்கு காரணம் இரண்டும் குடும்ப படம் என்பதுதான். இதேபோல் வேதாளத்தின் தாக்கம் அண்ணாத்த படத்தில் இருக்கிறது என்று சொன்னால் இரண்டும் கொல்கத்தாவில் நடப்பதுதான். அது பஞ்சாப் அல்லது ஹரியானா என்று தேர்வு செய்வது ஒரு விஷயம் அல்ல. ஆனால் நான் கல்கத்தாவை தேர்வு செய்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது.
அதற்கு நீங்கள் கல்கத்தா போயிருந்தால் தெரியும். பெண்களுக்கான பவர் அங்கு அதிகம். காளிமாதா, துர்கா தேவி கடவுள் தொடங்கி அந்த மாநிலத்தை ஆளும் நபர் வரை அங்கு ஒரு பெண்ணுக்கான வைப்ரேஷன் இருக்கிறது. நாம் பண்ணுவது தங்கச்சி சென்டிமென்ட் படம். எனவே அந்த ஜானருக்கு அந்த இடம் சரியாக இருக்கும் என்று தோன்றியது. மக்களும் அதை ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.
நாம் எப்படி பிறரை காயப்படுத்தக் கூடாது என்று நினைக்கிறோமோ, அதேபோல் நாமும் காயப்பட்டு விடாமல், நம்மளை பார்த்துக் கொள்ள வேண்டியது இருக்கிறது. எனவே நான் சோஷியல் மீடியாவில் வரக்கூடிய நெகட்டிவ் விஷயங்களையும், ட்ரோல்களையும் தவிர்த்துவிடுவேன். அவற்றை பார்ப்பதில்லை. நான் தாக்கப்படுவது என்பது புதிது கிடையாது. என்னைப் பொறுத்தவரை நான் என் வேலையை சின்சியராக பார்ப்பேன். உண்மையாக விமர்சனம் கொடுப்பவர்கள் அவர்களின் வேலையை பார்க்கிறார்கள். நெகட்டிவ் கொடுப்பவர்கள், தங்களுக்குக்கு கொடுக்கப்பட்ட வேலையை பார்க்கிறார்கள். இறைவன் எல்லோருக்கும் மேலே நின்று அவர் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இவ்வளவு பெரிய வெற்றி, இவ்ளோ பெரிய பாராட்டு வருகிறது என்றால் அதுதான் விஷயம். நான் நானாக இருக்கிறேன். மிகவும் பாஸிடிவாகவும், இறைபக்தியுடனும் இருக்கும் என்னைப் பற்றிய நெகட்டிவான விஷயங்கள் என்னை ஒரு சதவீதம் கூட பாதிக்காது. எனவே என்னை வெறுப்பவர்களுக்கும் என்னைப் போல ஒரு பாசிட்டிவான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது கிடைத்தால் அவர்கள் வெறுப்பை உமிழ மாட்டார்கள். காழ்ப்புணர்ச்சியை காட்ட மாட்டார்கள்.
ரஜினி சாருக்கு பயங்கரமான ஸ்டோரி நாலேஜ் உண்டு. ஒவ்வொரு காட்சியும் உண்டு பண்ணக்கூடிய தாக்கம் அவருக்கு தெளிவாக புரியும். முதல் முறை அவர் அண்ணாத்த படம் பார்க்கிறார். நான் வெளியே காத்திருக்கிறேன். கலாநிதி மாறன் சார் உடன் இருந்தார். அனைவரும் இருந்தார்கள். படம் பார்த்து முடித்து விட்டு வெளியே வந்த ரஜினி சார், மாறன் சாரை பார்த்து பேசிவிட்டு என்னைத் திரும்பிப் பார்த்தார்.
வேகமாக என்னிடம் வந்து என்னை கட்டி ஆரத் தழுவி, கன்னத்தில் முத்தம் கொடுத்தார். 45 வருடங்களாக அவருடைய மிகப் பெரிய ரசிகராக இருந்த எனக்கு அவருடைய முத்தம் என்பதை வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு மிகப்பெரிய விருதாக நான் கருதுகிறேன்!” என்று சிறுத்தை சிவா பேசியிருக்கும் பல்வேறு விஷயங்களை இணைப்பில் உள்ள வீடியோவில் காணலாம்.