தமிழில் கற்றது தமிழ், அங்காடித் தெரு, எங்கேயும் எப்போதும் ஆகிய படங்கள் தொடங்கி பல திரைப்படங்களில் நடித்து, முன்னணி ஹீரோயின்களுள் ஒருவராக திகழும் நடிகை அஞ்சலி, தற்போது ஃபால் எனும் வெப் சீரிஸில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
டிசம்பர் 9-ஆம் தேதி டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் வெளியாகும் இந்த தொடரில், எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய் , ராஜ்மோகன் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இத்தொடரில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் டிவி சேனலுக்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ள நடிகை அஞ்சலியிடம், “நடிகைகளின் வாழ்க்கையில் பற்றி பல்வேறு விஷயங்கள் எழுதப்படும், அதில் நீங்கள் உங்கள் குறித்து கேட்ட அல்லது படித்த மோசமான செய்தி என்ன என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அஞ்சலி நிறையவே இருக்கிறது. அதில் வொர்ஸ்ட் என்று சொல்ல முடியாது. மிகவும் வேடிக்கையாக இருந்த ஒன்று எனக்கு திருமணம் ஆகி நான் அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டேன் என்பதுதான். என் அம்மாவே மிகவும் ஆச்சரியமாக கேட்டார். ஏனென்றால் எனக்கே தெரியாது. அவரை பொறுத்த வரை, ஒவ்வொரு விஷயமும் நான் விளக்கத் தேவையில்லை. சிறுவயதில் இருந்து நான் எப்படி என்று அவருக்கு தெரியும். ஆனாலும் சில வேலைகளில் அவர் ஒரு ஹீரோயினின் அம்மா என்பதை தாண்டி, அவரும் ஒரு அன்றாட வாழ்க்கையில் உள்ள ஒரு நபர் என்பதால் சில அதிருப்திக்கு உள்ளாவார். ஏன் இப்படி செய்கிறார்கள் என்று வேதனை அடையத்தான் செய்வார்.” என்று குறிப்பிட்டார்.
மேலும் தனது திருமணத்தை பற்றி பேசும் பொழுது, “திருமணம் செய்வது நடிப்பதற்கு தடையாக இருக்கும் என்பது பற்றி நான் யோசித்ததில்லை. அப்படி கருதவில்லை. அதே சமயம் என்னுடைய நலம் விரும்பிகள் மற்றும் நெருங்கிய வட்டாரத்தில் இருப்பவர்கள், நான் இன்னும் நிறையவே நடிக்கலாம் என்று கூறுகிறார்கள். பெரிய ஹீரோக்களின் படங்களில் கமர்சியலாக நான் நடிப்பதை விட, எந்த படம் அமைந்தாலும் நான் பெஸ்ட் பெர்ஃபார்மராக இருக்க வேண்டும். அதையும் முதன்மை கதாபாத்திரத்தில் செய்ய வேண்டும் என்றுதான் முனைகிறேன். 5 படங்கள் பண்ணுவதை விட, ஒரு படம் பண்ணினாலும் வலுவான கதாபாத்திரத்தை தேர்வு செய்ய விரும்புகிறேன்.
ஆனால் அதற்கு திருமணம் ஒரு தடையாக இருக்கும் என்பது பற்றி இல்லை. இங்கு திருமணம் செய்து விட்டால் அந்த ஹீரோயினின் சாப்டர் முடிந்தது என்று சொல்லும் போக்கும் இப்போது மாறிக்கொண்டுதான் இருக்கிறது. பாலிவுட்டில் அது நிறையவே மாறிவிட்டது. எல்லாருமே அதை நிரூபித்துக் காட்டுகிறார்கள். அந்த ட்ரெண்ட் இங்கேயும் வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக தனது 10 வருட திரைப்பட பயணத்தில் சந்தித்த ஏற்ற இறக்கங்கள் தமது படங்களை பாதித்தனவா? என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்திருந்த அஞ்சலி, “நான் சந்தோஷமாக இருந்தால் திரைப்படத்தில் பொலிவாக தெரிவேன். குழப்பத்துடன் இருந்தால் திரைப்படத்திலும் என் முகத்தில் அது பிரதிபலிக்க கூடும். நானும் இறக்கங்களை சந்தித்து இருக்கிறேன். ஆனால் அது என் திரைப்படங்களை அல்லது திரைவாழ்வை பாதித்ததா என்று கேட்டால், நான் இன்று உங்கள் முன்னால் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். நான் மீண்டு வந்திருக்கிறேன். கண்டிப்பாக அஞ்சலி சாதாரணமாக வந்துவிட்டாள் என்று சொன்னால் கஷ்டமாகத்தான் இருக்கும்” என்று அஞ்சலி கூறினார்.
அஞ்சலி பேசும் முழு வீடியோவை இணைப்பில் காணலாம்.