மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ்.
இதன் பின்னர், கார்த்தியை வைத்து லோகேஷ் இயக்கிய 'கைதி' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதற்கு அடுத்தபடியாக, விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'மாஸ்டர்' படமும் ஹிட்டாகி இருந்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூன்-3 ஆம் தேதியன்று ரிலீஸ் ஆகி இருந்த விக்ரம் திரைப்படத்தையும் லோகேஷ் இயக்கி இருந்தார். கமல், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்தது.
மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு, மீண்டும் விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக லியோ படத்தில் இணைவது குறிப்பிடத்தக்கது.
லியோ படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பீஸ்ட் படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார். இயக்குனர் மிஷ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் & அனிருத் ரவிச்சந்திரன் இணைந்து புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளனர் என தகவல்கள் பரவி வருகின்றன. இந்த படத்தினை தேசிய விருது வென்ற பிரபல ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் இரட்டையர்கள் இயக்க உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து இயக்குனர் சமுத்திரக்கனி தமது டிவிட்டர் பக்கத்தில் "வாழ்த்துகள் செல்லங்களே" என ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார்.