இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், ஆண்ட்ரியா, சமுத்திரகனி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் வடசென்னை.
சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இந்த திரைப்படம் ஹிட் அடித்தது. இந்த படத்தின் மொத்த கதையும் சந்திராவாக வரும் ஆண்ட்ரியா, தன் கணவர் ராஜனாக வரும் அமீரின் சாவுக்காக பழிவாங்குவதாக இருக்கும். எனவே ஆண்ட்ரியாவை மையப்படுத்தியே கதை சுழலும். இந்த படத்தில் ஆண்ட்ரியாவின் நடிப்பு பாராட்டுதலை பெற்றது.
இந்நிலையில் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் அறிமுக இயக்குநர் ஆனந்த் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார். அத்துடன் இந்த படத்தின் படப்பிடிப்பு 16 நாட்கள் நடைபெற்று நிறைவு பெற்றுள்ளதாகவும், இதுவும் ஒரு பெண்ணை மையப் படுத்திய கதை என்று தகவல்கள் கிடைத்துள்ளன.
முன்னதாக இயக்குநர் வெற்றிமாறன் லென்ஸ், பாரம் உள்ளிட்ட திரைப்படங்களை தமது கிராஸ் ரூட் பேனரில் வெளியிட்டார். இதேபோல் மணிமாறன் இயக்கத்திலான சங்கத்தலைவன் படத்தினை தயாரித்து வெளியிட்டார். தற்போது ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘அதிகாரம்’ திரைப்படத்துக்கான கதையை எழுதி, ஃபைவ் ஸ்டார் கதிரேசனுடன் இணைந்து தமது கிராஸ் ரூட் தயாரிப்பின் கீழ் வெற்றிமாறன் தயாரிக்கிறார்.
தவிர, சூர்யா நடிப்பில் வாடிவாசல் திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது.