ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்திப் படம் 'அந்தாதூன்'. 2018-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றதுடன் 3 தேசிய விருதுகளையும் வென்றது.
இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை கடும் போட்டிக்கு இடையே தியாகராஜன் கைப்பற்றினார். பொன்மகள் வந்தாள்' படத்தின் மூலம் அனைவருடைய பாராட்டையும் பெற்ற இயக்குநர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கவுள்ளார். இதில் நாயகனாக பிரசாந்த் நடிக்கவுள்ளார். இதற்காக உடல் இழைத்து தயாராகி வருகிறார். 'அந்தாதூன்' படத்தில் தபுவின் கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது. தமிழ் ரீமேக்கில் அந்தக் கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் வைரலாகி வரும் தகவல் என்னவென்றால் அந்தாதூன் படத்தின் மலையாள ரீமேக்கை பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பாய்ஸ், கன்னத்தில் முத்தமிட்டால், சிட்டிசன், ஆயுத எழுத்து, ஏழாம் அறிவு போன்ற பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இயக்குனராக 2014 ஆம் ஆண்டு வெளியான 'யான்' படத்தை இயக்கி இருந்தார். இந்நிலையில் அடுத்ததாக அவர் இந்த படத்தை இயக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மலையாளத்தில் ஆயுஷ்மான் குரானா நடித்த கதாபாத்திரத்தில் பிருத்திவிராஜ் நடிக்க இருப்பதாகவும் ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் ராஷி கண்ணா நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தியை மலையாள சினிமா ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.