நடிகர் சூர்யா, தயாரித்து நடித்த ஜெய்பீம் திரைப்படத்தில் பழங்குடி இருளர் இன மக்களின் மீதான காவல்துறையினரின் மனித உரிமை அத்துமீறல் அழுத்தமாக பேசப்பட்டிருக்கிறது. இப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடியில் நேரடியாக நவம்பர் 2-ஆம் தேதி வெளியானது.
இப்படத்தில் வழக்கறிஞர் சந்துருவாக வரும் சூர்யா, பாதிக்கப்பட்ட மக்களின் அநீதிக்கு எதிராக சட்ட வழி போராட்டத்தை எதிர்கொள்கிறார். இறுதியில் அவர்களுக்கு நீதி வாங்கி தந்தாரா இல்லையா என்பதுதான் கதை. இதில் குருமூர்த்தி எனும் காவலர் கதாபாத்திரத்தில் தமிழரசன் நடித்திருப்பார். காவலர்களிடம் சிக்கி லாக்கப் மரணத்துக்கு உள்ளாகும் ராஜாக்கண்ணுவின் கேரக்டரில் மணிகண்டன் நடித்து இருப்பார். அவருடைய மனைவி செங்கேனியாக லிஜோமோல் ஜோஸ் நடித்து இருப்பார்.
உண்மையில் செங்கேனி கதாபாத்திரத்தின் நிஜ வாழ்க்கை பெண்மணி பார்வதி ஆவார். உண்மை கதையை தழுவி கற்பனையாக எடுக்கப்பட்டதாகக் குறிப்பிடும் இப்படத்தில் பல கேரக்டர்களுக்கு உண்மையான பெயர்களும், சில கேரக்டர்களுக்கு கற்பனை பெயர்களும் சூட்டப்பட்டிருந்தன. இதனிடையே இப்படத்தில் வரும் காவலர் குருமூர்த்தி போன் பேசும் காட்சியின் பின்னணியில் இருந்த காலண்டரில் குறிப்பிட்ட சமுதாய மக்களின் குறியீட்டை குறிக்கும் படம் சர்ச்சைக்குள்ளானதை அடுத்து, கோரிக்கைகளின் பேரில், அந்த படம் மாற்றப்பட்ட வேறு ஒரு கடவுளின் படம் வைக்கப்பட்டு தற்போது ஜெய்பீம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் ஒளிபரப்பாகி வருகிறது.
இதனிடையே இப்படம் குறித்து தற்போது பேசியிருக்கும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் “படைப்புச் சுதந்திரம் எந்த சமுதாயத்தையும் இழிவுபடுத்த பயன்படுத்தப் படக்கூடாது: மக்களின் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்!” என்று கூறி,‘ஜெய்பீம்’ படத்துக்கு எதிரான தமது கேள்விகளுடன் கூடிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயம் எந்த அளவுக்கு திட்டமிட்டு இழிவுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது குறித்து ஆயிரக்கணக்கான மக்களும் இளைஞர்களும் என்னிடம் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இதே உணர்வும் மனநிலையும் மேல் உள்ள நிலையில் தங்களிடமிருந்து அறமற்ற அமைதி மட்டுமே வெளிவந்து கொண்டிருப்பதால்தான் தங்களுக்கு இந்தக் கடிதத்தை நான் எழுத வேண்டியிருக்கிறது. அடக்குமுறை யார் மீது கட்டவிழ்த்து பட்டாலும் அவை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அதற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்” என்று குறிப்பிட்டு தொடங்கியுள்ளார்.
தொடர்ந்து அறிக்கையில், “ ஜெய்பீம் உண்மையாகவே உண்மை நிகழ்வை அடிப்படையாக கொண்ட திரைப்படமா ? உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் என்றால்.. உண்மை நிகழ்வு நடந்த இடம் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அடுத்த முதனை கிராமமா? அல்லது விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த கோணமலை கிராமமா?
உண்மை நிகழ்வில் ராஜாக்கண்ணுவை விசாரணை என்கிற பெயரில் அடித்து படுகொலை செய்த காவல்துறை சார்பு ஆய்வாளர் பெயர் அந்தோணிசாமி என்பது படக்குழுவினருக்கு தெரியுமா? மரணம் அடையும் பழங்குடி இருளர் இன இளைஞருக்கு ராஜாக்கண்ணு, வழக்கறிஞருக்கு சந்துரு, ஐ.ஜிக்கு பெருமாள்சாமி என உண்மை நிகழ்வின் கதாபாத்திரங்கள் பெயரையே சூட்டிய படக்குழு காவல் அதிகாரி மட்டும் அந்தோணிசாமி என்ற பெயருக்கு பதிலாக மட்டும் குரு.. குரு.. என்று நீதிமன்ற விசாரணையில் அழைப்பதாக காட்சி அமைத்தது எதற்காக? என்று பல்வேறு கேள்விகளை கேட்டு இருக்கிறார்.
தொடர்ந்து தம்முடைய அறிக்கையில், “ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி, இந்த அநீதிக்கு எதிரான போராட்டத்தில் ஊர் மக்களும், ஊராட்சித் தலைவரும் தமக்கு உறுதுணையாக இருந்ததாக ஊடகங்களிடம் குறிப்பிடுகிறார். அவர்கள் அனைவருமே வன்னியர்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் ஊர் மக்களையும் ஊராட்சித் தலைவரையும் கெட்டவர்களாகவும், ஜாதிவெறி கொண்டவர்களாகவும் படத்தில் சித்தரித்தது ஏன்?
அந்த காவல் அதிகாரி குரு பேசும் காட்சியின் பின்னணியில் வன்னியர்களின் புனித சின்னமான அக்னி கலசம் வைக்கப்பட்டு இருந்தது ஏன்? இது சர்ச்சையை உருவாக்கி விளம்பரம் தேடும் முயற்சியா? ஜெய்பீம் என்றால் அம்பேத்கரியத்துக்கு வெற்றி என அர்த்தம்.. ஆனால் நீங்கள் வன்னிய சமுதாயத்தை இழிவுபடுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்தியிருக்கிறீகள்.. இதுதான் நீங்கள் ஜெய்பீம் என்பதற்கு அறிந்துகொண்ட பொருளா?” என்று சுமார் ஒன்பது கேள்விகளை அன்புமணி ராமதாஸ் முன் வைத்திருக்கிறார்.
மேலும், “படைப்பாளிகளை விட அவர்களுக்கு வாழ்க்கை அளிக்கும் ரசிகர்கள்தான் பெரியவர்கள். இந்தப் படத்தில் நீங்கள் உங்களின் வன்மத்தை காட்டினால் அடுத்து உங்களின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் போது அவர்கள் தங்களின் கோபத்தைக் காட்டக் கூடும். இவை எதுவுமே தேவையில்லை.
கலைக்கும், உங்களின் படைப்பிற்கும் நீங்கள் நேர்மையானவராக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால் உங்களை நோக்கி மேலே எழுப்பப்பட்டுள்ள வினாக்களுக்கு விடை அளிப்பீர்கள் என்று நம்புகிறேன். அதுதான் மக்களின் கோபத்தை தணிக்கும். மிக்க நன்றி” என்றும் அவர் அந்த அறிக்கையில் முடித்துள்ளார்.