பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகர் ஆனந்த கண்ணனின் மறைவு அனைவரிடத்திலும் பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனிடையே அவருடைய நண்பர்கள் பலரும் அவரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல பாடகர் ADK ஆனந்த கண்ணன் குறித்து சுருக்கமான ஒரு வீடியோவை பதிவிட்டிருக்கிறார்.
அந்த வீடியோவில் பேசிய ADK, “இந்த விஷயத்தை நான் ஆணித்தரமாக பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த காலத்தில் எல்லாருமே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறோம். நம் பாடல்களையோ, நம் படைப்புகளையோ யாராவது பகிர்ந்தால், நாம் மிகவும் சந்தோஷப் படுவோம். சில பேர் அப்படி நாம் பகிர சொல்லி உதவி கேட்கும்போது செய்கிறார்கள். சில பேர் அதை புறக்கணிக்கிறார்கள்.
நான் பலருக்கும் அந்த வகையில் உதவி செய்திருக்கிறேன். இது சுய தம்பட்டத்துக்காக சொல்லவில்லை. மிகப்பெரிய கலைஞன் ஆனந்த கண்ணன். இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் முக்கால்வாசி விஜேக்கள் அவரைப் பார்த்து இன்ஸ்பிரேஷன் ஆகி தான், இந்த தொழிலுக்கே வந்திருக்கிறார்கள். ஒரு சிங்கப்பூர் காரர் என்பதே தெரியாத அளவுக்கு, ஆனந்த கண்ணன் இந்தியாவில் அவ்வளவு பிரபலமாக சன் மியூசிக்கில் கொடிகட்டிப் பறந்த ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்துள்ளார்.
அவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அவர் மனைவியுடன் சிங்கப்பூருக்கு வந்து வாழ்ந்து வந்தார். கேன்சரால் உயிரிழந்து விட்டார். நான் உங்களிடம் கேட்பதெல்லாம் அவருக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் அவர் பறையிசை கலைக்கு மிகவும் உறு துணையாக இருந்தார்.
இந்த உலகம் நிறைய பேரை மறுக்கிறது. அவர் உயிரோடு இருக்கும்போது. அவரது கலைகளை பகிர்வதற்கு நிறைய பேரிடம் உதவி கேட்டார். யாரும் செய்யவில்லை. ஆனால் சில பேர் உதவி செய்தனர். இன்று அவர் நம்முடன் இல்லை. உயிரோடு இருக்கும் பொழுது ஒரு ஆள் வந்து உதவி செய்து கேட்டால் தயவுசெய்து செய்ய முடிந்தால் செய்யுங்கள்.” என உருக்கமாக பேசியுள்ளார்.