இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், சமீப காலமாக துபாயில் தங்கி இருந்து தனது இசைப்பணிகளை கவனித்து வருகிறார்.
தமிழில் பொன்னியின் செல்வன், கோப்ரா, அயலான் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் ஏ.ஆர். ரஹ்மான், தற்போதும் மிக பிசியாக மியூசிக் ஆல்பம் மற்றும் திரைப்பட பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
அது மட்டுமில்லாமல், ஹிந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் பெரிய திரைப்படங்களுக்கு இசையமைக்கவும் செய்து வருகிறார்.
விசிட் அடித்த இளையராஜா
'Dubai Expo 2020' யில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தி இருந்தார் ரஹ்மான். தொடர்ந்து, 'Dubai Expo'வில், ரஹ்மானை போல இளையராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோரின் இசை நிகழ்ச்சிகளும் நடத்திருந்தது. அந்த சமயத்தில், ரஹ்மான் ஸ்டூடியோவிற்கு விசிட் அடித்திருந்தார் இளையராஜா. ரஹ்மான் மற்றும் இளையராஜா இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி, அதிக லைக்குகளை அள்ளி இருந்தது.
இதன் பிறகு, தமிழக முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்றிருந்த போதும், ரஹ்மான் ஸ்டூடியோவிற்கு தன்னுடைய குடும்பத்தினருடன் சென்றிருந்தார். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி, இணையத்தில் அதிகம் வைரலாகி இருந்தது.
மூப்பில்லா தமிழ் தாயே..
இன்னொரு பக்கம், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில், "மூப்பில்லா தமிழே தாயே" என்னும் மியூசிக் ஆல்பம், கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி இருந்தது. இந்த பாடல், சுமார் ஒரு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து, ரசிகர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பினை பெற்று வரும் நிலையில், மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, ரஹ்மானின் ஆல்பத்தினை பாராட்டி, ட்வீட் ஒன்றைச் செய்துள்ளார்.
தமிழில் ட்வீட் செய்த ஆனந்த் மஹிந்திரா
அதுவும், ஆனந்த் மஹிந்திராவுடைய ட்வீட் தமிழில் அமைந்திருந்தது தான் மிகப் பெரிய ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக அவருடைய பதிவில், "இதில் இடம்பெற்றிருக்கும் ஜாவா பைக் என்று சொல்லப்பட்டதால் இதை முதலில் பார்த்தேன். இப்போது என்னால் பார்க்காமல் இருக்க முடியாது. அருமையான இசை மற்றும் வீடியோ" என ரஹ்மானைக் குறிப்பிட்டு ட்வீட் ஒன்றைச் செய்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி நிறுவனத்தின் தலைவர் தமிழில் ட்வீட் செய்துள்ளது பற்றி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே, பொங்கலின் போதும், தமிழ் மொழி குறித்து ஆனந்த் மஹிந்திரா ட்வீட் செய்திருந்தார்.
ஆனந்த் மஹிந்திரா தன்னுடைய பள்ளிப் படிப்பை தமிழ்நாட்டில் முடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.