சிம்பு. சிம்புன்னு சொன்னாலே சர்ச்சை தான். ஒழுங்கா ஷூட்டிங் வர மாட்டார். சினிமா மேல இப்போ ஆர்வம் கொறைஞ்சுடுச்சு. இனிமே சிம்பு அவ்ளோ தான்ன்னு எத்தனையோ பேச்சு. ஆனா எல்லாத்தையும் தாண்டி இன்னும் உங்க முன்னாடி நம்பிக்கையோட போராடிட்டு இருக்குறதும் அதே சிம்பு தான். அப்படி பேசுன எல்லாத்துக்கும் சிம்புவோட கெரீயர் சொல்லிடும், சிம்பு யார்ன்னு..!
1984-ல் உறவை காத்த கிளியில் அறிமுகம். அடுத்த ஐந்து வருடத்தில் சம்சார சங்கீதம் படத்தில் I am a little star, ஆவேன் நான் சூப்பர்ஸ்டார் என சிம்பு போட்ட ஆட்டம், அவரின் சூப்பர்ஸ்டார் இமேஜை அன்றே எழுத ஆரம்பித்துவிட்டது. எல்லோரும் பாடத்தை மனப்பாடம் செய்து மார்க் வாங்கி கொண்டிருந்த வயதில் சிம்பு வசனத்தை மனப்பாடம் செய்து டேக் ஓகே செய்து கொண்டிருந்தார். அடுத்து 2002-ல் காதல் அழிவதில்லை படத்தில் ஹீரோ. சிம்புன்னு சொன்னா புது ஸ்டைலே வரும் என தனக்கென ஸ்டைல் ஸ்டேட்மென்ட்டை முதல் படத்திலேயே சொல்லிவிட்டார் சிம்பு. தம் படத்தில் சிம்பு செய்த இளசுகளின் சேட்டையும் சானக்யா பாடலும் சிம்பு ரசிகர்களின் 90-ஸ் கிட்ஸ் மெமரீஸ்கள்.
2004-ஆம் வருடம் சிம்புவின் சினிமா வாழ்க்கையின் அடுத்த கட்ட பாய்ச்சலை பதிவு செய்தது. கோவில் படத்தில் அடக்கமான கிராமத்து பையனாக திரிந்த சிம்பு, குத்து படத்தில் அடாவடி காலேஜ் ஸ்டூடன்டாக விரல் சொடுக்கி அதிரடி காட்டினார். ரம்யா கிருஷணன் உடன் போட்டு தாக்கு பாடலில் சிம்பு போட்ட ஆட்டம் ஆயிரம் வாலா சரவெடி. அதே அண்டின் இறுதியில் தனது பென்ச்மார்க்கை மன்மதனில் பதிவு செய்தார் சிம்பு. பெண்களிடம் ப்ளேபாய் ஆட்டிட்யூட், ஜோதிகாவுடன் க்யூட் ரொமான்ஸ், கொலைகாரனாய் குரூரம் காட்டுவது, மொட்ட சாகும் போது கதறி அழுவது என நடிப்பின் அரக்கனாய் ஆல் ஏரியாவிலும் கரக்டட் மச்சி என டிக் அடித்தார் சிம்பு. அமைதியான எரிமலையாய் தொட்டி ஜெயாவிலும் ஆல் டைம் என்டர்டெய்னராக வல்லவனிலும் ஜொலித்த சிம்புவின் சிலம்பாட்டாம், கமர்ஷியல் தமிழ் சினிமா டெம்ப்ளேட்டின் டெய்லர் மேட் ரகம்.
2010-ல் வின்னைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் ஒட்டு மொத்த காதலர்களின் செல்லப்பிள்ளையானான் கார்த்திக். நின்று போன கல்யாணத்தை கண்டு குழந்தையாய் குதுகலிப்பது, கிஸ் அடிக்கும் போது ஏன் தடுக்கல என்று கோவப்படுவது என சாதிக்க துடிக்கும் உதவி இயக்குநரையும் உருகி உருகி காதலிக்கும் இளைஞனையும் ஒருங்கே நமக்களித்தார் சிம்பு. வானம் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி ஒன்று போதும், சிம்புவின் நடிப்பு நம் கண்களில் ஈரத்தை சேர்த்துவிடும்.
இப்படி தன் க்ராஃபை பீக்கில் கொண்டு சென்ற சிம்புவுக்கு ஒஸ்தி, போடாபோடி, வாலு, ட்ரிபில் ஏ, வந்தா ராஜாவாதான் வருவேன் என அடுத்தடுத்த படங்கள் பெரிய வெற்றியை அடையாமல் போனது. மேலும் பீப் பாடல் சர்ச்சை, நடிகர் சங்க சர்ச்சை, திடீர் ஆண்மீக நாட்டம் என சிம்புவின் பாதை தடம் மாறி இலக்கில்லாமல் பயணிக்க தொடங்கியது. இருந்தும் சிம்பு சிம்புவாகவே இருந்தார். அதே போராட்ட குணம் ! , செக்கசிவந்த வானம் படத்தில் மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு காட்டிய அலட்டலான நடிப்பே, அவருக்குள் நாம் பார்த்து ரசித்த சிம்பு இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறார் என்பதை சொல்லிவிடும்.
நாம் எல்லோரும் அனுபவித்த பால்யத்தை சிம்பு அனுபவிக்கவில்லை. விளையாடும் வயதில் சிம்பு மீது விழுந்தது லைம்லைட் வெளிச்சம். ஹீரோவான சில படங்களிலேயே தனக்கென மாஸ் ரசிகர்கள். தமிழ் சினிமாவில் முதல் சிங்கில் பாடல், பாப் பாடகர் ஏகான்னை வைத்து ஆல்பம் பாடல், இயக்கம், பாடலாசிரியர், டான்ஸ் என சிம்பு தனக்கான உயரங்களை சீக்கிரமே தொட்டுவிட்டார். அதுதான் சிம்புவின் தனித்தன்மை. அது தான் அவருக்கென இன்னும் ரசிகர்களை வைத்திருக்கிறது.
சிம்பு என்றுமே யாரோ போட்ட சாலையில் நடந்து செல்வதை விரும்பவில்லை. கற்களும் முட்களும் நிறைந்த மலைகளை ஏறவே விரும்பினார். அப்படி தான் இருந்தார். அப்படி தான் இருப்பார். அதனால் தான் அவர் சிம்பு. எல்லாம் கடந்து, சிம்பு, நம்மை ஓவ்வொரு நொடியிலும் ஆச்சர்யப்படுத்தும் பழைய சிம்புவாக மீண்டும் வருவார். அது மாநாடு படத்தில் நடக்கும் என்றே எதிர்ப்பார்க்கலாம். ஏன்னா, இந்த ஓஸ்திக்கு லிமிட்டே கிடையாது..!
Happy Birthday our beloved STR.