கொரோனா கொள்ளை நோய் தாக்கத்துக்கு பூமியே தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது போல் முடங்கிக் கிடக்கிறது. தன்னையும், தன்னை சார்ந்தவர்களையும் பாதுகாத்துக்கொள்ள சமூக இடைவெளி உறுதியாக கடைபிடிக்கப் பட்டு வருகிறது. ஆனால், அதே சமையம் வணிக அளவில் உலகெங்கும் ஒரு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்தியா போன்ற பெரிய திரைத்துறை கொண்ட நாட்டிற்கு இதனால் ஏற்பட்டுள்ள இழப்பு பெரிது தான். திரைப்பட ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற இயலாது என்பதால் அவர்களின் அன்றாட தேவைகளுக்கு பெரும் அல்லல்களை சந்திக்க வேண்டியுள்ளது.
இதை மனதில் கொண்டு பாலிவுட் பிக் பி அமிதாப், நடிகர் பிரபுவோடு இணைந்து இந்தியா முழுவதும் உள்ள திரைப்படத்துறை உறுப்பினர்களுக்கு 12 கோடி ரூபாய் உதவித்தொகை அறிவித்துள்ளார். இதில் தமிழ் திரையுலக தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 2 கோடியே 70 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
சோனி டிவி மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் இணைந்து இந்த உதவியை வழங்குகிறது. இதன் மூலம் தென் இந்திய திரைப்பட சங்க உறுப்பினர்கள் 18 ஆயிரம் பேருக்கு தலா 1,500 ரூபாய் பிக் பசார் வவுச்சர் கூப்பன் வழங்கப்படுகிறது என ஃபெப்சி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.