மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகவிருக்கும் VSP33 திரைப்படத்தில் இருந்து அமலா பால் நீக்கப்பட்டது குறித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் மிகுந்த பொருட் செலவில் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகந்த் இயக்குகிறார். பேராண்மை, புறம்போக்கு படங்களில் இயக்குநர் எஸ்.பி ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இந்நிலையில், இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அமலா பால் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென அமலா பால் அப்படத்தில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகின. தேதி பிரச்சனை காரணமாக அமலா பால் விலகியதாக கூறப்பட்ட நிலையில், அவர் தயாரிப்பு குழுவிற்கு போதிய ஒத்துழைப்பு தரவில்லை என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.
தற்போது இது குறித்து நடிகை அமலா பால், விளக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘மிகுந்த மன வருத்ததுடன் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். VSP 33-ல் இருந்து நானாக விலவில்லை. என்னிடம் ஆலோசிக்காமலே படத்தில் இருந்து என்னை நீக்கிவிட்டனர். மும்பையில் இந்த படத்திற்கான ஆடைகள் வாங்குவதிலும், ஸ்டைலிங்கிலும் ஈடுபட்டிருக்கையில் தயாரிப்பாளர் எனக்கு மெசேஜ் செய்து இந்த படத்தில் நீங்கள் வேண்டாம் என கூறினார். அதற்கு அவர் சொன்ன காரணம், சந்திரா ஆர்ட்ஸின் நிபந்தனைகள் உங்களுடன் ஒத்துப்போகவில்லை. ஊட்டி படப்பிடிப்பில் தங்குவதற்கு அதிகம் டிமாண்ட் செய்வதாக கூறினார்'.
'‘ஆடை’ படத்தின் டீசர் வெளியான பிறகு என் மீது பொறாமையில் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறார். என்னை பற்றி திரையுலகில் பரப்பப்படும் பொய்யான விஷயங்களை வைத்துக்கொண்டு பிற்போக்குத்தனமான சிந்தனையில் யோசித்திருக்கிறார். நான் ஒரு நடிகை, கதைக்கு என்ன தேவையோ அதன்படி நடிப்பது எனது வேலை. அதை தொடர்ந்து செய்வேன். தமிழ் சினிமாவிற்கு நல்ல படங்கள் வேண்டும் என்றால் இதுபோன்ற சிந்தனையுள்ளவர்கள் மாற வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
மேலும், ‘விஜய் சேதுபதி மீது எந்த வருத்தமும் இல்லை. உங்களுடைய ரசிகை நான். நிச்சயம் உங்களுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன். என் மீது சந்திரா புரொடக்ஷன்ஸ் பரப்பிய பொய்யான தகவலுக்காக இந்த அறிக்கையை மன வருத்ததுடன் பகிர்ந்திருக்கிறேன்’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.