'ஆடை' படத்தில் யாரும் ஏற்கத்துணியாத வேடத்தில் தைரியமாக நடித்து விமர்சகர்களின் புருவம் செய்திருந்தார் அமலா பால். இந்த படத்தின் மூலம் தான் தேர்ந்த நடிகை என்பதை நிரூபித்தார். இந்த படத்துக்காக அவர் பல்வேறு விருதுகளை அவர் பெற்றார்.
இதனையடுத்து நடிகை அமலா பால் 'அதோ அந்த பறவை போல' படத்தில் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இந்த படத்துக்கு சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்ய, ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை கே.ஆர்.வினோத் இயக்கியுள்ளார்.
நடிகை அமலா பாலின் தந்தை பால் வர்க்கீஸ் கடந்த ஜனவரி மாதம் இயற்கை எய்தினார். இந்நிலையில் தற்போது அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவை எழுதியுள்ளார். அதில், ''பெற்றோர்களை இழப்பது என்பது வார்த்தைகளால் விளக்க முடியாதது. எனது அப்பாவை இழந்த பிறகு வாழ்க்கையின் புதிய பரிணாமத்தை பார்க்கிறேன். பல்வேறு விஷயங்கள் குறித்து அது எனக்கு உணர்த்தியது.
நாம் வளர வளர நம்மிடம் இருக்கும் குழந்தைத்தன்மையை பாக்ஸில் வைத்து மூடிவிடுகிறோம். நம்மை நாமே நேசிக்க மறந்துவிடுகிறோம்.எப்பொழுது நாம் நம்மை முழுவதுமாக நேசிக்க கற்கப்போகிறோம் ? நம் அம்மாக்கள் அவர்களை நேசிக்க மறந்துவிட்டார்கள். அவர்கள் தங்கள் முழுவாழ்வையும் தங்கள் கணவருக்காக குடும்பத்தினருக்காக செலவிடுகின்றனர்.
நான் மனக்கவலையினால் என்னையும் என் அம்மாவையும் நினைக்க மறந்துவிட்டேன். ஆனால் இப்பொழுது அன்பின் வழியே எங்களை நாங்கள் ஃபீனிக்ஸ் போல மீட்டெடுத்துக்கொண்டிருக்கிறோம்'' என்றார்.