கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். கடந்த அக்டோபர் 29ம் தேதி உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கும் போது புனித் ராஜ்குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மோசமான உடல்நிலையுடன் பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது திடீர் மறைவு சினிமா ரசிகர்கள் மற்றும் இந்தியத் திரைப்பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு படையெடுத்து வந்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து புனித் ராஜ்குமார் உடல் காண்டீவராவில் உள்ள அவரது தந்தை சமாதிக்குப் பக்கத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய நிலையில் படப்பிடிப்பின் காரணமாக பல நடிகர்கள் புனித் ராஜ்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து விஜய் சேதுபதி, விஷால், உதயநிதி ஸ்டாலின் கமல் உள்ளிட்ட நடிகர்கள் புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் புனித் ராஜ்குமார் சமாதியில்அஞ்சலி செலுத்தினார். புஷ்பா படத்தின் படப்பிடிப்பு பணியிலும், வெளியிட்டு பணியிலும் பிசியாக இருந்த அல்லு அர்ஜுன் நேற்று (3.2.2022) புனித் ராஜ்குமார் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தியதுடன் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்பு, சமூகவலைதள பக்கத்தில் புனித்தின் குடும்பத்தினர், நண்பர்கள், நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்களுக்கு தனது மரியாதையையும் செலுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
புனித் ராஜ்குமார் வீட்டில் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்தை பார்த்த அல்லு அர்ஜூன், புனித்தின் புகைப்படத்தை கையால் வருடி தொட்டு பார்க்கும் காட்சி காண்போரை கண்ணீர் கலங்க வைத்துள்ளது. தற்போது இதுதொடர்பான வீடியோவை அவரது ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். மேலும், புனித் கடைசியாக நடித்த ஜேம்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.