இரண்டு வருடங்களுக்கு முன்பு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து சக்க போடு போட்ட 'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் இந்தி வெளியீட்டை தயாரிப்பு நிறுவனம் கைவிட்டது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, சுனில், ஆகியோர் நடிப்பில் வெளிவந்து வசூல் சாதனை புரிந்து வரும் படம் புஷ்பா. இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியானது. இப்படம் 'பான் இந்தியா' படமாக இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பாலிவுட்டில் இந்தப் படத்திற்கு இந்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இரண்டு பாகமாக வெளியாகும் இந்த படத்திற்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரமாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளது. முதல் பாகமான 'புஷ்பா: தி ரைஸ்' படத்தின் தியேட்டர், சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமைகள் அனைத்தும் சேர்த்து ரூ.250 கோடி ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. ஓ சொல்றியா பாடல், ஓ சாமி பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. எனவே அல்லு அர்ஜுனுக்கு வட இந்தியாவில் மார்க்கெட் தற்போது உச்சத்தில் இருக்கிறது.
இதனால், கடந்த 2019ம் ஆண்டு அல்லு அர்ஜூன் நடிப்பில் 2019ல் வெளியான 'அலா வைகுந்தபுரம்லோ' படத்தை இந்தியில் டப் செய்து ஜன.26ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர்.தமன் இசையில் அனைத்து பாடலும் ஹிட் அடித்தன. த்ரி விக்ரம் இயக்கிய இந்த படம் மொழி கடந்து தென்னிந்தியா முழுவதும் சக்க போடு போட்டது. அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.
தற்போது அலா வைகுந்தபுரம்லோ திரைப்படமே இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் இந்தியில் வெளியானால் தங்கள் படத்தின் வணிகம் பாதிக்கும் என்று கார்த்திக் ஆர்யனின் 'ஷெஸாடா' படக்குழுவினர் அதிருப்தி தெரிவித்திருந்தனர். 'அலா வைகுந்தபுரம்லோ' படம் இந்தியில் 'ஷெஸாடா' வாக ஆர்யன் கான் - கீர்த்தி சனோன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. ரோகித் தவான் இயக்கி வருகிறார்.
இதனைத்தொடர்ந்து இந்தி வெளியீட்டைக் கைவிட்டுள்ளார் தயாரிப்பாளர் மணிஷ் கிரிஷ் ஷா. இந்தி டப் செய்து வெளியிட்டால் படத்திற்கு இந்தி ரீமேக்கிற்கு வரவேற்பு கிடைக்காது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.