நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ஜெய்பீம் திரைப்படத்தில் பழங்குடி இருளர் இன மக்களின் மீதான காவல்துறையினரின் மனித உரிமை அத்துமீறல் குறித்து, உண்மை நிகழ்வைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியான இந்த படத்தின் கதாபாத்திர பெயர், காலண்டர் புகைப்படம் உள்ளிட்டவை சர்ச்சைக்குள்ளானதை அடுத்து, காலண்டர் சர்ச்சை பத்தில் சரிசெய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து சூர்யா, ஜெய்பீம் படத்தின் கதாபாத்திர பெயர்கள் - படத்தின் கதையமைப்பு உள்ளிட்டவை குறித்த பல்வேறு விமர்சனங்களுக்கும் தம் தரப்பில் இருந்து விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதனிடையே தமிழக முதல்வர், மாநில இந்திய மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக தலைவர் திருமாவளவன் என பலரும் படத்தை பாராட்டியும், வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன் சில நலத்திடங்களை முன்னெடுக்க கோரிக்கையையும் முன்வைத்தனர்.
எனினும் மேலும் விமர்சனங்களும் பாராட்டுகளும் என கலவையான மதிப்பீடுகள் ஜெய்பீமை குறிப்பிட்டு முன்வைக்கப்பட்டு வரும் சூழலில், அனைத்திந்திய சூர்யா ரசிகர்கள் கிளப் சார்பில் ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது.
அந்த அறிக்கையில், “சூர்யா அண்ணன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜெய்பீம்’ படம் அதிகாரத்துக்கு எதிரான மக்களின் போர்க்குரலாக உலகமெங்கும் ஒலிக்கிறது. படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பும் அங்கீகாரமும்தான் இந்த மண்ணில் மாற்றம் நிகழும் என்பதற்கான நம்பிக்கை. அதேநேரம் படத்துக்கு எதிரான கருத்துகளை ஒருசிலர் திட்டமிட்டுப் பரப்பி வருவதையும் நாம் கவனிக்கிறோம்.
சூர்யா அண்ணனுக்கு எதிராகப் பேசப்படும் நியாயமற்ற விஷயங்களை அறம்சார்ந்த இந்த சமூகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. அதனால் எப்போதும்போல் நாம் பொறுமையாக இருப்பதுதான் சிறப்பு. சூர்யா அண்ணன் எந்த சாதி மத வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டவர் என்பதை நாம் மட்டும் அல்ல, இந்த நாடும் நன்கறியும். அதனால் எவருக்கும் விளக்கமோ, பதிலடியோ கொடுக்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை.
கட்டுப்பாடும் பொறுமையும் கொண்ட நம் மன்றத்தினர் பேச்சாகவோ சமூக வலைத்தளப் பதிவுகளாகவோ எவ்வித எதிர்வினையும் ஆற்ற வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கிறோம். ‘தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம்.
உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற’ என்ற அண்ணன் நமக்கு கற்பித்த பாதையில் பயணிப்போம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.