ஹாலிவுட்டில் பிரபலமான நடிகர்களில் ஒருவரான நடிகர் அலெக் பால்ட்வின் நடிப்பில் உருவாகி வரும் ஹாலிவுட் படம் 'ரஸ்ட்'.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் தான், டம்மி துப்பாக்கி என்று நினைத்த துப்பாக்கியில் இருந்து துரதிர்ஷ்டவசமாக குண்டு பாய்ந்ததில் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் பரிதாபமாக பலியான சம்பவம் உலக திரைப்பட உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அலெக் பால்ட்வின் நடித்து, இணைந்து தயாரிக்கும் 'ரஸ்ட்' படத்தின் இந்த படப்பிடிப்பு நியூ மெக்ஸிகோவின், சாண்டா ஃபே பகுதியில் நடைபெற்று வந்த நிலையில், இங்கு படப்பிடிப்புக்காக வைக்கப்பட்டிருந்த போலியான ஒரு துப்பாக்கியை நடிகர் அலெக் பால்ட்வின் இயக்கியுள்ளார்.
வெடித்தால் சப்தம் மட்டும் வருவது போன்று வடிவமைக்கப்பட்டிருந்ததாக கருதப்பட்ட இந்த துப்பாக்கியை அலெக் பால்ட்வின் இயக்கியதும், உண்மையாகவே அதிலிருக்கும் குண்டு பாய்ந்து, படத்தின் பெண் ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் காயம் பட்டு பின்னர் பலியானார். அவருக்கு வயது 42.
படத்தின் இயக்குநர் ஜோயல் சோஸா படுகாயமடைந்ததை அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து யார் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுவதுடன் படப்பிடிப்பில் விசாரணை நடந்து வருகிறது. ஹாலிவுட் வட்டாரங்களும் படக்குழுவினரும் இதனை விபத்து என குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.