பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார் மற்றும் கியாரா அத்வானி நடித்த லக்ஷ்மி பாம் , வித்யா பாலன் நடித்த சகுந்தலா தேவி மற்றும் அமிதாப் பச்சன்-ஆயுஷ்மான் குரானா நடிப்பில் உருவானா குலாபோ சீதாபோ ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராக இருந்தன. ஆனால் கொரோனா பிரச்சனைக்குப் பிறகான ஊரடங்கு உத்தரவினால் இப்படங்களின் வெளியீட்டுத் தேதி தள்ளிப் போனது.
இந்நிலையில் இந்த மூன்று படங்களும் நேரடியாக OTT தளங்களில் வெளியாகவிருக்கின்றன என்ற செய்தி வெளிவந்துள்ளது. ஆனால் திரைப்பட ரசிகர்களும் ஆர்வலர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தப் படங்களை தாங்கள் தியேட்டரில் பார்க்கவே விரும்புகிறோம் என்று சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். அதிலும் முக்கியமாக லஷ்மி பாம் படத்தை தியேட்டர்களில் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் ட்விட்டரில் அக்ஷய் குமார் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து கிடைத்த தகவல், "லஷ்மி பாம் படம் இப்போது ஹாட் ஸ்டாரில் வெளியாகும் என்ற செய்தி உண்மைதான். முதலில் கருத்து வேறுபாடு இருந்தாலும், இப்போது படம் ஆன்லைனில் வெளியிடப்படும். போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மிச்சமிருக்கின்றன, லாக்டவுன் முடிந்ததும் அதை விரைவாக முடித்துவிடுவோம்.
மேலும் தியேட்டரில் எதிர்ப்பார்த்த அளவு மக்களால் இந்த சமயத்தில் வர முடியாது. எனவே படம் வெற்றி பெறாது. லாக்டவுன் முடிந்த ஒரு மாதத்திற்குப் பிறகு OTT இயங்குதளத்தில் படத்தை வெளியிடுவதே இப்போதைய முடிவு. ஆனால் பட வெளியீட்டு தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. " என்றனர். ஊரடங்கு முடிந்த பின்தான் படத்தைப் பற்றிய செய்தி எதுவானாலும் வெளியிடப்படும் என்றும் கூறினார்கள்.
லக்ஷ்மி பாம் ரூ .125 கோடிக்கு OTT தளத்திற்கு விற்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. படத்தை எப்படியாவது பார்க்க முடிகிறதே என்று சில ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ள நிலையில், தியேட்டர்களில் வெளியானால் இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ .200 கோடிக்கு மேல் வியாபாரம் ஆகும் என்று கூறி அக்ஷய் குமாரின் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
ஒரு ரசிகர் ட்விட்டரில் கூறியது, "இந்த 120 கோடி ரூபாயை ஓடிடியில் விற்பதற்குப் பதிலாக, படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனால் முதல் வாரத்திலேயே அள்ளிவிடலாம் என்று நினைக்கிறேன் .. லஷ்மி பாமுக்கு நேரடி OTT வெளியீடு தேவை இல்லை என்று பல ரசிகர்கள் எதிர்வினை ஆற்றிவருகின்றார்கள்.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.