அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘தல 60’ திரைப்படத்தில் நடிக்க நடிகர்கள் தேவை என்று சில ஊடக மற்றும் சமூக வலைதளங்களில் பரவிய தகவலுக்கு தயாரிப்பாளர் போனி கபூர் சட்ட ரீதியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
‘நேர்கொண்ட பார்வை’ படத்தின்வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக நடிகர் அஜித், ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியில் ‘தல 60’ திரைப்படம் உருவாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்திற்காக தல அஜித் தனது வழக்கமான சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருந்து இளம் தோற்றத்திற்கு மாறிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி, அவரது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், ‘தல 60’ திரைப்படம் குறித்து பரவிய பொய்யான தகவலை மறுத்து, மீறினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தயாரிப்பாளர் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தயாரிப்பாளர் போனி கபூர் தரப்பு வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அஜித்குமார் படத்தில் நடிக்க நடிகர், நடிகையர் தேவைப்படுவதாகவும், விருப்பமுள்ளவர்கள் தங்களை அணுகுமாறு போலி செய்தி பரப்பப்பட்டு வருகிறது. போனி கபூர் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து எந்தவொரு விளம்பரத்தையுமே அளிக்கவில்லை. அவ்வாறு வெளியாகியுள்ள விளம்பரங்களுக்கு எங்கள் நிறுவனமோ, போனிகபூரோ பொறுப்பேற்க முடியாது. அந்த விளம்பரங்களுக்கும் போனி கபூருக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல” என்று எச்சரித்துள்ளனர்.