வலிமை படத்தின் புதிய போஸ்டர் இன்று (01.01.2022) வெளியாகி உள்ளது.

வலிமை டிரெய்லர்
வலிமை படத்தின் டிரெய்லர் நேற்று முன் தினம் மாலை வெளியானது. வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், சினிமாத் துறையில் உள்ள பலர், குறிப்பாக தமிழ் சினிமா அல்லாத தெலுங்கு இந்தி சினிமாவின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் வலிமை படத்தின் டிரெய்லரை பாராட்டி வருகின்றனர். வலிமை படத்தின் டிரெய்லரில் மிக முக்கிய அம்சமாக பைக் சேஸிங் காட்சிகளும் சண்டைக்காட்சிகளும் அமைந்துள்ளது. இந்த சேஸிங் காட்சிகளுடன் வலிமை படத்தின் எடிட்டிங், ஒளிப்பதிவு, பிண்ணனி இசை, உடையமைப்பு, கலை இயக்கமும் பாராட்டை பெற்று வருகிறது.
'வலிமை' படத்தின் ரிலீஸ்
நேற்று நடிகர் அஜித் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'வலிமை' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 'வலிமை' படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் முன்பே அறிவித்தது. வலிமை படத்திற்காக திரையரங்குகளை எடுக்கும் பணிகள் படக்குழு மூலம் முழுவீச்சில் துவங்கியுள்ளன. இதுவரை வெளியீட்டு தேதி அறிவிக்கபடாத நிலையிலேயே 'வலிமை' படத்தை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் பலத்த போட்டி நிலவுகிறது. குறிப்பாக தென் மாவட்ட பகுதிகளில் உள்ள தியேட்டர்கள் தற்போதே வலிமை படத்தை திரையிடும் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. மதுரை மாவட்டத்தில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து தியேட்டர்களிலும் வலிமை ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் ரிலீஸ் தேதியாக 2022 ஜனவரி 13 என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
புதிய லுக் போஸ்டர்
இந்நிலையில் வலிமை படத்தின் புதிய லுக் போஸ்டர் இன்று பத்திரிக்கைகளிலும், நடிகர் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா மூலம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. வலிமை படத்திற்காக இன்று நாளிதழ்களில் முதல் பக்கம் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷியும் நடிக்கின்றனர். ராஜ் ஐயப்பா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அனு வர்தன் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார், சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.