சென்னை, 21, பிப்ரவரி 2022: சதுரங்க வேட்டை, தீரன் படங்களை இயக்கிய பின், நடிகர் அஜித் குமார் நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தையும், அதனைத் தொடர்ந்து தற்போது வலிமை திரைப்படத்தையும் இயக்கியுள்ளவர் இயக்குநர் எச்.வினோத்.
போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸின் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வரும் 2022, பிப்ரவரி 24-ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் இயக்குநர் எச்.வினோத், நம்மிடையே பிரத்தியேக பேட்டிக்கு இணைந்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி.. பதில்களின் தொடர்ச்சியான இரண்டாம் பாகம்.. இங்கே..
வலிமை திரைப்பட கதை அஜித் சாருக்கென்றே உருவாக்கப்பட்டதா? இல்லை ஏற்கனவே நீங்கள் வைத்திருந்த கதையா? அல்லது அந்தக் கதையை அஜித் சாருக்கு என மாற்றம் செய்திருக்கிறீர்களா?
பதில்: வலிமை என்பது என்னிடம் முன்பே இருந்த கதை. அஜித் சாருக்கு என்று ஒரு படம் பண்ண நினைக்கும்போது நம்மிடமிருக்கும் கதைகளை நாம் தேடுவோம்ல? அப்படி ஒரு பைக் திருடனை பற்றிய கதை என்னிடம் இருந்தது. அந்த கதையில் வரும் ஆக்ஷன் உள்ளிட்ட விஷயங்களை இதில் சேர்த்துக்கொண்டேன். ஆனால் அது Basic கதை தான், 80% கதை புதுசா கிரியேட் பண்ணப்பட்ட கதை தான். தவிர நிறைய வெர்ஷன்களாக எழுதப்பட்ட கதை.. அதன் முதல் வெர்ஷன் அசிஸ்டன்களிடம் சொன்னப்போ எல்லாருக்கும் பிடிச்சிருந்தது.
அதுக்கு அப்றம் ஒவ்வொரு வெர்ஷனாக அப்கிரேடு ஆனது. ஏனென்றால் அஜித் சாருக்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல், பொதுவாகவே அஜித் சாரின் அமர்க்களம், பில்லா, மங்காத்தா என ஒரு மாஸான மற்றும் யுவனின் இசையுடன் சேர்ந்த மேஜிக் உள்ளிட்டவற்றை விரும்பக் கூடிய வெகுஜன ஆடியன்ஸ் இருக்காங்க. இன்னொரு பக்கம் சிவா சாரின் வீரம், வேதாளம், விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்த அஜித் சாரின் வேறொரு பரிமாணத்துக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் பெரும் ரசிகர்களாக உள்ளனர்.
இவர்களுடன், புதுசா என்ன சொல்ல போறீங்க?. அல்லது புதுசா என்ன பண்ண போறீங்க என எதிர்பார்ப்புடன் உள்ள ஆடியன்ஸ் இருக்காங்க. இப்படியான ஆடியன்ஸையும் தியேட்டர்க்குள் அழைத்து வரவேண்டும். பெரும் பட்ஜெட் கொண்ட ஹீரோ படம் எனும் போது அதை அனைத்து ஊர்லயும் இருக்குற அனைத்து தரப்பு ஆடியன்ஸிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்கு தகுந்தாற்போல் ஸ்கிரிப்ட் எதையெல்லாம் அனுமதிக்குதோ, அந்த மாற்றங்களை நண்பர்கள், டெக்னீசியன்கள் உள்ளிட்டோரின் ஆலோசனையுடன் புகுத்தினோம். புதுப்பித்தோம்.
முதல் படம் சதுரங்க வேட்டை, அடுத்த படம் தீரன், இப்போது வலிமை இவை எல்லாவற்றிலும் இருக்கும் பொதுவான மைய பிரச்சினையாக "சட்டத்துக்கு விரோதமாக, திட்டமிட்டு திருடும் கும்பல்" குறித்த பின்னணியை சொல்கிறீர்கள். இந்த மாதிரியான கதைகள் மீதான தாக்கம் உங்களுக்கு எப்போது துளிர்விட்டது?
பதில்: வலிமை படம் முற்றுமுழுக்க வேற கதை. என் படங்களில் க்ரைமில் நான் ஆர்வம் காட்டுவதில்லை. அதை ஏகப்பட படங்களில் பண்ணிவிட்டார்கள். ஆனால் அந்த க்ரைம் ஏன் நடக்கிறது? அதை செய்ய வேண்டிய அவசியம் ஒருவருக்கு ஏன் உண்டாகிறது? அதன் பின்னணி என்ன? என ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அதன் End வரை பார்ப்பது என்னுடைய பழக்கம். அது எப்படி உருவானது என்பதை விட, நாம் செல்லும் வியாபாரத்தில், சந்தையில் என்ன மாதிரியான விஷயங்களுக்கு மதிப்பும் வரவேற்பும் இருக்கிறது என்பதை பார்க்கிறோம். முதல் படமான சதுரங்க வேட்டை வரவேற்பைப் பெறுகிறது, அதே மாதிரி தான், அடுத்தடுத்த படங்களும் வரவேற்பை பெஏஉகின்றன, அங்கீகரிக்கப்படுகின்றன.
வலிமை படம் பேசுற அடிப்படை அரசியல் என்ன?
பதில்: அரசியல் எதுவும் பேசல. அரசியல் ஏற்படுத்தும் விளைவுகளால் சமூகத்தில், ஒரு குடும்ப அமைப்பில் இருக்கும் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை பற்றி இந்த களத்தில் பேச முடிஞ்சுது. ஆனால் அரசியலை பேசவில்லை. அரசியல் இருப்பதாக நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பில்லை..
வலிமை திரைப்பட உருவாக்கத்தில்.. "எல்லாம் ஓகே.. இந்த ஒரு விஷயம் மட்டும் சரியாக வந்து விட வேண்டும்" என்கிற பரிதவிப்பு உங்களுக்கு எந்த விஷயத்தில் இருந்தது? இருக்கிறது?
பதில்: “எல்லாமே சரியா வரனும்னு தானே போராடுவோம்… படத்தோட USP, ஆக்ஷன் பேமிலி செண்டிமெண்ட் தான்.. அது ரெண்டுமே சரியா வரனும்னு போராடினோம்.. ஷூட்ல சில விஷயங்கள் சரியா பண்ண முடியல … அதையெல்லாம் போஸ்ட் புரொடக்ஷன்ல எடிட்டரும் நம்பினு ஒரு ஏ.டியும் நிறைய வாட்டி எடிட் பன்ணி சரி பண்ணி இருக்காங்க”
ஃபேஸ்புக்ல ஒரு ஐடி வினோத் ஹரி மூர்த்தினு இருக்கு அது நீங்க தானா?
பதில்: இல்லை, நான் எந்த சோஷியல் மீடியாவிலும் இல்லை.
கார்த்தியுடன் உங்களோட 2வது படம்.. அடுத்த படங்கள் அஜித்துடன்... லோகேஷ் கனகராஜ், மாநகரம் படத்தைத் தொடர்ந்து கைதி படத்தை கார்த்தி நடிப்பில் இயக்கினார். அடுத்த படம் விஜய் நடிப்பில் மாஸ்டர்.. பா.ரஞ்சித் தமது 2வது படமாக மெட்ராஸ் படத்தை கார்த்தி நடிப்பில் இயக்கினார். அடுத்த படம் ரஜினி படம். இப்படி அந்த காலம் போல் இல்லாமல், இரண்டு மூன்று படங்களில் புதிய இயக்குநர்கள் மெகா ஸ்டார்களுடன் இணைய முடிகிறதா? இதை உச்ச நட்சத்திரங்கள் எப்படி பார்க்கிறார்கள்?
பதில்: சினிமா எப்படி இருக்கு என்றால், ஸ்டார் நடிகர்கள் சிலர் டைரக்டர்களே இல்லை என்று நினைக்கலாம். சில டைரக்டர்கள் நிறைய ஸ்டார் நடிகர்களே இல்லை என நினைக்கலாம். புரொடியூசர்கள் சிலர் பார்வையில் டைரக்டர்கள் நிறைய செலவை இழுத்து விட்டுருவாங்க என்றும் ஸ்டார் நடிகர்கள் எல்லாம் நிறைய சம்பளம் கேட்பார்கள் என்றும் நினைக்கலாம். இது ஒரு பயங்கர குழப்பமான சூழல் தான். எனவே கார்த்தி சாருக்கு படம் பண்ணவுடனே விஜய் சாருக்கோ, அஜித் சாருக்கோ, ரஜினி சாருக்கோ படம் பண்ணிவிடுகிறார்கள் என்பது மூட நம்பிக்கை. அது எல்லாருக்கும் வொர்க் அவுட் ஆகாது.
திரைத்துறையில் மிக அரிதான நிறுவனம் ட்ரீம் வாரியர்ஸ். தயாரிப்பாளர்கள் பொதுவாக ஒரு கதையை ஹீரோவிடம் சொன்னதும், கதை ஓகே, பாட்டு-ஃபைட் - குடும்ப செண்டிமெண்ட் காட்சிகள் எல்லாம் இருக்கா? என கேட்பார்கள். இதுதான் கலாச்சாரம். ஆனால் ட்ரீம் வாரியர்ஸ், ஸ்கிரிப்ட்டை படித்து, ஏழெட்டு பிரிண்ட் அவுட் எடுத்து, அது தொடர்பான பல கருத்துகளை பேசி விவாதிச்சு வொர்க் பண்ணுவாங்க. இதுதான் அவங்க பாலிசி. இந்த ப்ராசஸை அவர்கள் பண்ணுவார்கள். மற்ற புரொடியூசர் கேட்கவோ, ஓகே பண்ணவோ தயங்குகிற படங்களை ட்ரீம் வாரியர்ஸ் பண்ணாங்க.
உதாரணமாக மாநகரம், மெட்ராஸ், தீரன், கைதி ஆகிய கதைகளை சொல்லலாம். இதுல என்ன தான் இருக்குனு கேப்போம் என இந்த கதைகளை அவர்கள் ஆர்வமாக கேட்டார்கள். ஹீரோவுக்கு கதை சொல்லுங்க என கேட்காமல், ஒரு நல்ல ஸ்கிரிப்ட் என தோன்றினால் அவர்கள் அந்த கதையின் தன்மை மாறாமல் ஹீரோவுக்கான கதையாகவும் ஜனங்களுக்கும் பிடித்தமான கதையாக மாற்றுவார்கள். அந்த வழக்கமில்லாத பாணியிலான படங்களின் வெற்றியினால், உச்சநட்சத்திரங்கள் அவற்றை கவனிக்கின்றனர்.
இந்த புதிய படங்களின் போக்கு குறித்து யோசிக்கும் உச்ச நட்சத்திரங்கள் அந்த இயக்குநர்களுடன் இணைகின்றனர். சிலருக்கு அது வொர்க் அவுட் ஆகும், சிலருக்கு வொர்க் அவுட் ஆகாமல் போகுது. இவ்ளோ தான். எப்போதுமே உச்ச நட்சத்திரங்களை சாமானிய படைப்பாளிகள் நெருங்க முடியும். ஆனால் அதுக்கு ஒரு ப்ராசஸ் இருக்கு. அதை கண்டுபிடிக்கனும். பல சமயம் அந்த ப்ராசஸ்க்கு நம்முடைய காண்டாக்ட் உதவும். உங்களிடம் ஒரு நல்ல ஸ்கிரிப்ட் இருந்தால் அது யாராக இருந்தாலும் கொண்டு சென்று, சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்திடும். ஒரு சினிமா ஷூட்டிங்கில் வரும் எல்லா பிரச்சனைகளையும் ஸ்கிரிப்ட் தான் சரி பண்ணும், ரிலீஸ்க்கு பிறகு வரும் பணப் பிரச்சனைகளை எல்லாம் அந்த படம் தான் சரி பண்ணும். இவை எல்லாம் கூடி சரியான ரிசல்ட் வந்தால் அடுத்த முறை அந்த கூட்டணியில் அடுத்த படம் உருவாகாமால் போகலாம். ஆனால் ஸ்கிரிப்ட்டும் படமும் நன்றாக இருந்து, வசூலும் கிடைத்தால் மீண்டும் இணைவார்கள்.
Also Read: ‘அஜித் சார் Set-ல ஒவ்வொருத்தரையும்..’ ஷாலினியிடம் வியந்து சொன்ன ஹூமா குரேஷி.. பேட்டி
வலிமை படத்தை எத்தனை முறை பாத்துருக்கீங்க? வலிமை - எந்த தியேட்டர்ல FDFS பாக்க போறீங்க?
பதில்: பார்க்க மாட்டேன்.. அப்றம் ... ஆமா, வலிமை படத்தை நான் நிறைய முறைக்கு மேல் பார்த்திருப்பேன், கணக்கே இல்லை.
இந்த படத்தில் செண்டிமெண்ட் காட்சிகளுக்கு எந்த மாதிரி ஸ்கோப் இருக்கிறது?
பதில்: செண்டிமெண்ட் என்றால், இதில் வழக்கமான அல்லது கதறுவது போலான செண்டிமெண்ட் இல்லை. ஆனால் ஒரு ரியல் எமோஷனை, அதாவது பேசுவதற்கு கடினமானதுனு ஒன்னு இருக்குல்ல? நடக்க சாத்தியமில்லாத விஷயங்கள்.. அதையெல்லாம் பேசியிருகோம். உண்மைக்கு நெருக்கமான ஒரு செண்டிமெண்ட் இதில் இருக்கிறது. அந்த செண்டிமெண்ட், அனைவரையும் நிச்சயம் தொடும்.
வலிமை கதை உருவானதற்கு என்ன காரணம்?
பதில்: வலிமை கதை உருவானதற்கு காரணம், இன்றை இளைஞர்களின் நிலைமை தான்.