நடிகர் அஜித்குமார் நடிக்கும் துணிவு படத்தின் படப்பிடிப்பு குறித்த பிரத்யேக தகவல் நமக்கு கிடைத்துள்ளது.
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் இந்த படத்தின் திட்டம் இரு ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது.
இந்த படத்தின் பூஜை கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி அன்று காலை 9.01 க்கு ஐத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டார்.
இந்த படத்திற்காக 47 நாட்கள் இடைவிடாது தொடர்ச்சியாக ஐதராபாத்தில் படக்குழு முதல் கட்ட படப்பிடிப்பை நடத்தினர்.
முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் 15ஆம் தேதி சென்னையில் துவங்கியது. சென்னையில் உள்ள காசிமேடு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காரப்பாக்கம், வண்டலூர் அருகிலுள்ள மண்ணிவாக்கம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தாக கூறப்படுகிறது. பின்னர் இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்து முடிந்தது. இந்த படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு தற்போது தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.
இந்த படத்தின் ஒளிப்பதிவை நீரவ் ஷா கவனிக்கிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.
இந்நிலையில் தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகரில் நடைபெற்று வரும் துணிவு படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் 12 ஆம் தேதியுடன் நிறைவடையும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாய்லாந்து நாட்டில் இருந்து மொத்த படக்குழுவினரும் அடுத்த வாரம் இந்தியாவுக்கு திரும்புவார்கள் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.